ஆனைமலை
காண்டூர் கால்வாயை சீரமைக்கும்
பணி முடிந்ததையடுத்து 25–ந் தேதி திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி
சீரமைக்கும் பணிகளை நேற்று விவசாயிகள் பார்வையிட்டனர்.
காண்டூர் கால்வாய்
பரம்பிக்குளம்– ஆழியாறு திட்டத்தின்
(பி.ஏ.பி) கீழ் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பரம்பிக்குளம்
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதியில் மின் உற்பத்தி செய்யப்பட்டு,
காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து
பி.ஏ.பி. திட்ட கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
49.3 கிலோ மீட்டர் தூரமுள்ள காண்டூர்
கால்வாய் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால், பல இடங்களில் இயற்கை சீற்றத்தால்
சேதம் அடைந்து இருந்தன. இதனால் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் வீணாகி வந்தது. எனவே
கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
விவசாயிகள் பார்வையிட்டனர்
இதைத்தொடர்ந்து கடந்த 2011–ம்
ஆண்டு ரூ.221.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு காண்டூர் கால்வாய் சீரமைக்கும் பணி தொடங்கியது.
இதன்படி 6 மாதம் சீரமைக்கும் பணி, 6 மாதம் தண்ணீர் திறப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன.
இந்த நிலையில் நேற்று திருமூர்த்தி
அணை பாசன சபை தலைவர் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீர்த்தேக்க பாசன சபை தலைவர் சின்னசாமி
மற்றும் பாசன சபைகளை சேர்ந்த விவசாயிகள் காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர்.
அவர்கள் ‘0’ பாயிண்ட் என்ற இடத்தில் இருந்து சீரமைக்கும் பணி எவ்வாறு நடைபெற்றுள்ளது
என்று பார்வையிட்டனர். அப்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், செயற்பொறியாளர்
சுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருப்தி
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:–
காண்டூர் கால்வாய் சீரமைக்கும்
பணி திருப்திகரமாக உள்ளது. இந்த கால்வாயில் மொத்தம் 10 இடங்களில் சுரங்க கால்வாய்கள்
உள்ளன. இதன் நீளம் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த சுரங்க கால்வாய்க்குள் சிதிலமடைந்துள்ளன.
இவற்றை சீரமைக்க வேண்டும். தற்போது
மற்ற இடங்களில் கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாவது பெருமளவு குறையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கண்காணிப்பு பொறியாளர்
இளங்கோவன் கூறியதாவது:–
25–ந் தேதி தண்ணீர் திறப்பு
காண்டூர் கால்வாயில் உள்ள சுரங்க
கால்வாய் பகுதியை சீரமைக்க தனியாக திட்டம் வடிவமைக்கப்படும். கால்வாய் மோசமாக இருந்த
போது சர்க்கார்பதியில் வினாடிக்கு 1050 கன அடி தண்ணீர் திறந்தால் 750 கன அடி தண்ணீர்தான்
திருமூர்த்தி அணைக்கு செல்லும். கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளதால் 1050 கன அடி திறந்தால்
1000 கனஅடி வரை தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு செல்லும். இதன் மூலம் அணை விரைவில் நிரம்பி
விடும்.
திருமூர்த்தி அணைக்கு காண்டூர்
கால்வாய் வழியாக வருகிற 25–ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் தண்ணீர் நிரம்பியதும்
4–வது மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
http://www.dailythanthi.com/News/Districts/Coimbatore/2015/09/23003445/Thirumoorthy-Dam-25-on-the-opening-of-the-water-a.vpf
No comments:
Post a Comment