சென்னை,
கால்நடை வளர்ப்போருக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் 100 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சின்னையா அறிவித்தார்.
கால்நடை கிளை நிலையங்கள்
தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்புத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்துப் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
கால்நடைகளுக்கு முதலுதவி மற்றும் இனப்பெருக்கம் போன்ற அடிப்படை வசதிகளை விவசாயிகள் பெறுவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் 100 கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
கோடை காலங்களில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதற்கு வசதியாக ஊறுகாய்புல் தயாரிப்புக்குத் தேவைப்படும் பாலிதீன் பைகள், 100 சதவீத மானியத்தில், பத்தாயிரம் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்படும்.
பசுந்தீவன விதை
கால்நடை பராமரிப்பு துறையின்கீழ் செயல்படும் ஏழு மாவட்ட கால்நடை பண்ணைகளில் மாநில அரசு தீவின அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் 480 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவன விதை உற்பத்தி செயல்படுத்தப்படும்.
உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் தேசிய மாட்டின இனப்பெருக்க திட்டத்தின்கீழ் திரவ நைட்ரஜன் உற்பத்தி நிலையம் நடப்பாண்டில் புதியதாக தோற்றுவிக்கப்படும். மாடுகளின் மரபியல் குறைபாடுகளையும் வம்சா வழியினையும் பரிசோதிக்க மூலக்கூறு பகுப்பாய்வுக் கூடம், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நிறுவப்படும்.
துணைவேந்தருக்கு வீடு
கால்நடைகளின் உடல்நலன், உற்பத்தித் திறனை கண்காணிக்கும் வகையில் தகவல் இணைய வசதிகள் மேம்படுத்தப்படும்.
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு வீடுகள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.
No comments:
Post a Comment