Monday, August 1, 2016

முகத்துக்கு பொலிவு தரும் ரோஜா



தோலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, சரும பராமரிப்பு குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தோல் நோய்களை போக்குவதில், கஸ்தூரி மஞ்சள் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இது, தோலுக்கு மென்மையை தருகிறது. தேங்காய் தோலுக்கு நன்மை தருகிறது. சோற்றுக் கற்றாழை, பாதாம் ஆகியவை தோல் நோய்களுக்கு மருந்தாகிறது. தோல் ஆரோக்கியமாக இருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆளிவிதை பொடியுடன் சிறிது கசகசா, தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தோலில் தடவினால் தோல் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். சருமம் பளபளப்பாக இருக்கும். கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கஸ்தூரி மஞ்சள் பொடியுடன், தேங்காய் பால் சேர்த்து கலந்து முகம் மற்றும் கை கால்களில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் தோல் பளபளப்பாக இருக்கும். பூஞ்சை காளான் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். சருமத்துக்கு பாதுகாப்பு தரும். வேர்குரு, கொப்புளங்கள், தோல் நோய்களுக்கு இது மருந்தாகிறது. கஸ்தூரி மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது.

தோல் ஆரோக்கியமாக இருக்க காய்கறி, பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரோஜா பூவை பயன்படுத்தி முகப்பொலிவுக்கான மருந்து தயாரிக்கலாம். ரோஜா பூவின் இதழ்களை பசையாக அரைத்து எடுக்கவும். சோற்றுக் கற்றாழையின் உள்ளே இருக்கும் சதையை எடுக்கவும். இரண்டையும் கலந்து முகத்துக்கு மேல்பூச்சாக போடவும். சிறிது நேரம் கழித்து கழுவினால் தோல் சுருக்கம் மறையும். சருமத்துக்கு பாதுகாப்பாக விளங்கும். முகத்துக்கு பொலிவை தரும். ரோஜா பூ இதழ்களை அரைத்து சாறு எடுக்கவும். பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து எடுக்கவும். இவைகளை நன்றாக கலக்கவும். இதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் புத்துணர்வு கிடைக்கும். சருமம் ஆரோக்கியம் பெறும். முகப்பருக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். சாதிக்காய் பொடியுடன், சந்தனப் பொடி சேர்க்கவும்.  இதில், எலுமிச்சை சாறு விட்டு கலந்து முகப்பரு மீது போட்டுவந்தால், பருக்கள் வடு இல்லாமல் மறையும். தோல் அழகு பெறும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment