Monday, August 22, 2016

மானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற ஆலோசனை


பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரி மக்காசோளத்தில் கூடுதல் மகசூல் பெற விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் வேளாண் இணை இயக்குநர் பி. சந்திரன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோடை உழவுக்குப் பின் 2 ஆம் உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழுவுரமும், களர் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 4 மூட்டை (200 கிலோ) ஜிப்சமும் இட்டு உழ வேண்டும். கடைசி உழவில் அடியுரமாக மண் பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவில் யூரியா, டி.ஏ.பி அல்லது காம்ப்ளக்ஸ் உரங்களை இட்டு உழ வேண்டும்.
ஏக்கருக்கு 1 கிலோ அசோஸ்பைரில்லம் மற்றும் 1 கிலோ பாஸ்போபாக்டீரியாவை 15 கூடை நன்கு மட்கிய தொழுவுரத்துடன் கலந்து, போதியளவு ஈரப்பதத்துடன் நிழலில் 15 முதல் 20 நாள்களுக்கு வைத்திருந்து, விதைத்த 15 அல்லது 20 வது நாளில் வயலில் இட வேண்டும். மானாவாரி மக்காசோளத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியானது பாருக்கு பார் 45 செ.மீ, செடிக்கு செடி 30 செ.மீ. ஆகும். எனவே, 45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். 45 செ.மீ அல்லது 0.45 மீ இடைவெளியில் பார்களும், 30 செ.மீ அல்லது 0.30 மீ இடைவெளியில் செடிகளும் இருக்க வேண்டும்.
1 ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையளவானது 8 முதல் 10 கிலோ அல்லது 30,000 விதைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு செடியில் உள்ள கதிரில் இருந்து குறைந்தபட்சமாக 100 கிராம் மணிகள் கிடைத்தால் ஏக்கரில் 3 டன் மகசூல் பெறலாம். மேலும், ஒரு கதிரில் சராசரியாக 160 கிராம் மணிகள் கிடைத்தால், ஏக்கருக்கு 4.8 டன் மகசூல் பெறலாம்.
ஒரு ஏக்கரில் 30,000 செடிகள் இருக்குமாறு பயிர்களின் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். இதற்கு கயிறு பிடித்து வரிசை நடவு முறையில் நடுவதே சிறந்த வழியாகும். மேலும், விதைகளை நடும்போது 4 செ.மீ ஆழத்தில் நட வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் மேலுரம் இடும்போது ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரத்தையும் தவறாமல் இட வேண்டும்.
ஆக, விவசாயிகள் மானாவாரி மக்காசோளத்தில் தொழுவுரம், மண் பரிசோதனை அடிப்படையில் உரங்கள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரம், ஏக்கருக்கு 30,000 செடிகள், வரிசை நடவு ஆகிய யுத்திகளை கடைபிடித்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.

Source : Dinamani

No comments:

Post a Comment