Thursday, August 18, 2016

தென்னை நாற்றங்கால் சாகுபடி - கூடுதல் லாபம் பெறும் விவசாயி


t

''தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு என்றும் அட்சய 
பாத்திரமாக விளங்குவது தென்னை தான்,'' என்கிறார் சோழவந்தான் தென்னை விவசாயி முருகேசன், 55. இவருடைய பாரம்பரிய தொழிலே தென்னை தான். 
50 ஏக்கரில் தென்னை மரம் வளர்த்து பராமரித்து வருகிறார். 
அத்துடன் ஒரு ஏக்கரில் நாற்றங்கால் பண்ணை அமைத்து, அதில் நாட்டு தேங்காய் நாற்றுகள், ஜாதி நாற்றுகள் வளர்த்து வருகிறார். 
இந்தவகை நாற்றினை நிலத்தில் நட்டு பயிரிட்டால் நான்கு ஆண்டுகளில் பலனுக்கு வந்துவிடும் ரகத்தை சேர்ந்தது. நவீனதொழில் நுட்பம் குறித்து விவசாயி முருகேசன் கூறியதாவது: இயற்கை உரத்தினை பயன்படுத்தி நாற்றுகளை வளர்க்கிறேன்.எங்களது தோப்பில் 50 ஆண்டு வயதுடைய தென்னை மரத்தில் பறிக்கப்பட்ட தேங்காயை தட்டி பார்த்து தேர்ந்தெடுப்போம். பின்னர் பசுமைகுடில் அமைத்த ஆற்றுமணல் திடலில் தோண்டிய குழியில், மக்கிய இலைதழை குப்பைகளை நசுக்கி அடியுரமாக வைத்து பதம்பார்த்த தேங்காய் விதையை பதித்து, தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆடு, மாட்டு சாணத்தை நன்றாக வெயிலில் உலர வைத்து பின் அதனை தண்ணீரில் கலந்து ஒவ்வொரு நாற்று கன்றுக்கும் இடவேண்டும்.
தினமும் காலையில் தண்ணீர் தெளித்து கன்றின் வளர்ச்சி குறித்து பராமரிக்க வேண்டும். ஆறு மாதத்தில் இளங்கன்று நாற்றில் குருத்து முளைத்து பூமியில் இருந்து பாளை வெளிப்படும். இயற்கை உரமிடுதலால் பூச்சி, நோய் தாக்காது. கோல்கட்டாவில் தயா ரான அடியுர ஊட்டச் சத்தாக 'மைக்ரோ ஆர்கானிக் டானிக்' ஒரு லிட்டரில் 6 லிட்டர் தண்ணீர் கலந்து 20 கன்றுகளுக்கு அடிபகுதியில் இடவேண்டும். இந்த வகை நாற்றுகளை பயிரிட்டதில் நான்கு ஆண்டுகளில் ஒரு மரத்தில் 60 காய்களுக்கு மேல் காய்க்கிறது. 
இதன் மூலம் கூடுதல் மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும். இந்த நவீனதொழில் நுட்பத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். தோட்டக்கலைத்துறை, அரசின் மானியம் பெறாமல் பண்ணை அமைத்து நவீன தொழில் நுட்பத்தில் தென்னை விவசாயத்தில் சாதனை படைத்து வருகிறார். தொடர்புக்கு 98653 61133.
- எம்.சின்ராஜா, சோழவந்தான்
.

Source : Dinamani

No comments:

Post a Comment