Thursday, August 18, 2016

"தரிசு நிலங்களில் வேப்பமர கன்றுகள் நடவுக்கு ரூ.17 ஆயிரம் மானியம்'



தரிசு நிலங்களில் வேப்பமரக் கன்றுகள் நடவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட வேளாண்மைத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தரிசு நிலங்களில் வளர்க்கக்கூடிய மரங்களில் வேப்பமரம் முக்கியத்துவம் வாய்ந்தது. வறட்சியைத் தாங்கி நன்கு வளரக்கூடிய தன்மை உள்ளது. ஆண்டு முழுவதும் பசுமையாகவும்,  குளிர்ச்சி தரும் மரமாகவும் உள்ளது. காற்று மண்டலத்தில் உள்ள நச்சுக்காற்றை உறிஞ்சுவதால் சுற்றுப்புறம் மாசுபடுவதும் தவிர்க்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வகை மண்ணிலும் வரும் தன்மையுடையது.
நடவு முறை: நான்கு முதல் 5 வயதுடைய வேப்பமரக் கன்றுகள் நடவு செய்ய ஏற்றது. 5-க்கு 5 மீட்டர் இடைவெளியில் 1-க்கு 1 மீ. என்ற அளவு குழியில் மண்புழு உரம், வேர் வளர்ச்சி பூசணம், உயிர் உரங்கள் கலந்து கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேர் பரப்புக்கு 400 கன்றுகள் தேவை. தரிசு மற்றும் மானாவாரி நிலங்களில் பருவமழை காலங்களில் நடவு செய்வது அவசியம். மழைக் காலம் முடிந்த பிறகு டிசம்பர், ஜனவரி மாதங்களில் செடிகளைச் சுற்றி களை நீக்க வேண்டும். மண்ணைக் கொத்துவதன் மூலம் வளர்ச்சி ஊக்கப்படும்.
மகசூல்: வேப்பமரம் நட்ட 5 முதல் 6 ஆண்டுகளில் பூக்கள் பூத்து காய்க்கத் தொடங்கும். 8 ஆண்டு மரத்தில் இருந்து 5 கிலோ விதையும், 10 ஆண்டு மரத்தில் இருந்து 10 கிலோ விதையும் கிடைக்கும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட வேப்பங்கொட்டை விதை கிலோ ரூ.5-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வருமானம் கிடைக்கும். ஊடுபயிர் செய்து உபரி வருமானமும் ஈட்டலாம்.
அரசு மானியம்: தரிசு நிலங்களில் வேப்பங்கன்றுகள் நடவு செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை நடவு செய்த பிறகே மானியம் வழங்கப்படும். மேலும், ஊடு பயிர் செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. ஆயிரம், பராமரிப்புச் செலவுக்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இரண்டாவது ஆண்டும் ஊடுபயிர் செய்ய ரூ.1000, பராமரிப்புக்கு ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். 3ஆம் ஆண்டில் ஊடுபயிருக்கு மட்டும் ரூ.1000 மானியமாக வழங்கப்படும். எனவே, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment