Tuesday, June 27, 2017

மழைநீர் சேகரிப்பு குறித்து வேளாண் அதிகாரி யோசனை

மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து, டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரராஜன், யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: விவசாய நிலத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, சட்டிகலப்பை அல்லது உளிக்கலப்பையால், உழவு செய்வதன் மூலம், அடி மண் மேலே வந்து, மழைநீர் அடி மண்ணில் இறங்கி, நிலத்தடி நீர் வளம் பெருகும். அதேபோல் சரிவான பகுதிக்கு குறுக்கே உழவு செய்வதால், மழைநீர் வீணாகாமல் தேங்கி நிற்கும். நிலக்கடலை மற்றும் சிறுதானியங்களை, அகலப்பாத்தி முறையில் விதைக்க வேண்டும். தோட்ட நிலங்களில் கிணறுகளுக்கு அருகில், பண்ணை குட்டை அமைத்தால் நிலத்தடிநீர் வளம் பெருகும்.

Source : Dinamalar

மழை தூவான் கருவி மூலம் வாழை சாகுபடி

குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்சாயத்து, பணிக்கம்பட்டி, குரும்பக்கரை பகுதியில், ரமேஷ் என்பவர், தனக்கு சொந்தமான, நான்கு ஏக்கர் வாழை விவசாயத்திற்கு போதிய தண்ணீர் வசதியின்றி சிரமப்பட்டு வந்தார். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், குறைந்த தண்ணீரை வைத்துக் கொண்டு, வாழையை காப்பாற்ற முயற்சி செய்தார். இதற்காக, வேளாண் துறையின் உதவியுடன், கிணற்றில் உள்ள மின் மோட்டார் குழாய் மூலம், தண்ணீர் எடுத்து, வாழைப்பயிருக்கு மழை தூவான் முறையில், தண்ணீர் பீய்ச்சி அடித்து, விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். சொட்டுநீர் பாசன முறை என்பதால், குறைந்த முதலீட்டில், வாழையை காப்பாற்றும் பணியில், சில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Source : Dinamalar

Thursday, June 22, 2017

வறட்சியிலும் இயற்கை வேளாண் நிலங்கள்... தப்பியது! ரசாயனத்தை முழுமையாக தவிர்க்க கோரிக்கை

கடுமையான வறட்சியிலும், இயற்கை வேளாண்மையை பின்பற்றும் விளைநிலங்கள் மட்டும், பசுமையுடன் காணப்படுகிறது. எனவே, ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும் என முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில், 35 ஆயிரம் எக்டேருக்கும் மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாட்டுச்சாணம், வேப்பம்புண்ணாக்கு உட்பட பாரம்பரிய இயற்கை உரங்களை மட்டுமே முன்பு விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
பின்னர், பல்வேறு காரணங்களால், ரசாயன உரங்களுக்கு மாறினர். ரசாயன உரங்களால் சாகுபடியில் விளைச்சல் அதிகரித்தாலும், தொடர் பயன்பாட்டால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு, தண்ணீரின் தேவையும் அதிகரித்தது.
தண்ணீர் பற்றாக்குறை
அதன் விளைவாக கடந்தாண்டு பொய்த்த பருவமழையினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும்பாலான தென்னந்தோப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க விவசாயிகள் போர்வெல் ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டும் பலனில்லை.
இருந்தும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மரங்கள் காய்ந்தன. பிற பகுதிகளில், வறட்சியின் பாதிப்பால், 80 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காப்பாற்றும் இயற்கை
பஞ்சகவ்யா, மாட்டுச்சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த தோப்புகளில், மரங்கள் பசுமையுடன் காணப்படுவதுடன், மகசூல் பாதிப்பும் இல்லையென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ரசாயன உர பயன்பாட்டினை தவிர்த்து, அனைத்து விவசாயிகளுமே பாரம்பரிய சாகுபடி முறைக்கு மாறினால் மட்டுமே எதிர்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டினை சமாளித்து விவசாயத்தை காப்பாற்ற முடியும் என்கின்றனர்.
மண்ணின் வளம் மேம்படும்
இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது: விவசாயிகள் பெரும்பாலும் மண்ணின் வளம், நீர்பயன்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளாமல், உயர் விளைச்சல் மற்றும் லாபத்தினை மட்டுமே எதிர்பார்த்து ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றின் விளைவு, இன்று ஏற்பட்டுள்ள வறட்சிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், 40, 50 ஆண்டுகள் பலன் கொடுக்க வேண்டிய தென்னை மரங்கள் பட்டுபோய் நிற்கின்றன.
ரசாயன உர பயன்பாட்டினால் உயர் விளைச்சலை அறுவடை செய்து, லாபம் ஈட்டலாம் என்று காத்திருந்த விவசாயிகள் இன்று வாழ்வாதாரத்தை இழந்து நிற்க வேண்டிய பரிதாப நிலை காணப்படுகிறது. இனியாவது விவசாயிகள் ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை வேளாண் முறைக்கு மாற வேண்டும்.
இல்லையெனில் மேலும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். விவசாயிகள் இயற்கை உரங்களுக்காக சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் வளர்க்கும் கால்நடைகளின் சாணம், சிறுநீர் இவற்றினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பஞ்சகவ்யா, ஜூவாமிர்தம் போன்றவற்றினை தயாரித்து பயன்படுத்தலாம்.
மேலும் வீடுகளில் மீதமாகும் காய்கறி உணவுக்கழிவுகள், சாணம் மற்றும் தோப்புகளில் கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரமும் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
இதுபோன்ற இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் தண்ணீரின் பயன்பாடு பாதியாக குறைவதுடன், மண்ணின் வளமும் மேம்படுகிறது.
தண்ணீரின் பயன்பாடும் பாதியாக குறைக்கப்படுவதால், கிணறுகளிலும் ஆண்டு முழுவதும் தண்
ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதனால், மரங்களுக்கு தடையில்
லாமல் சீராக தண்ணீர் பாய்ச்ச முடியும். அதுமட்டுமில்லாமல் விவசாயத்தில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துவதால், நஞ்சில்லாத உணவுகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.

ஊக்கப்படுத்த வேண்டும்
இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளும் மெல்ல, மெல்ல இயற்கை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஆனால் விற்பனை செய்யும் போது விலையில் பெரியளவிலான மாற்றங்கள் ஏதுமில்லை.
இதனால் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source : Dinamalar

காற்றிலிருந்து வாழையை பாதுகாப்பது எப்படி?

பலத்த காற்றின் காரணமாக, வாழைகள் சேதமடைவதை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து, தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் வீசும் பலத்த காற்றின் காரணமாக, வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகின்றனர். பல்லடம் வட்டாரத்தில் கடந்த ஆண்டு வீசிய காற்றின் காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் முறிந்து விழுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தின.
தற்போது பல்லடம் வட்டாரத்தில் காற்று பலமாகி வீசி வருவதாக, விவசாயிகள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காற்றிலிருந்து பயிர்களை காப்பதற்கான வழிமுறைகளை, பல்லடம் தோட்டகலை துறை அறிவுறுத்தி உள்ளது.
தோட்டக்கலை துறை உதவி அலுவலர் மலர்மண்ணன் கூறியதாவது:
பருவ காற்று காலங்களில், வாழைகள் சேதமாவதை தடுக்க முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும். பொதுவாகவே சவுக்கு மரங்களை வளர்ப்பது, காற்றை தடுக்கும் சிறந்த வழிமுறையாகும். தோட்டத்தை சுற்றி, வேலி போன்று சவுக்கு மரங்களை வளர்ப்பது, காற்றிலிருந்து பயிர்களை காப்பதுடன், தோட்டத்துக்கு பாதுகாப்பை ஏற்படுத்துவதாகவும் அமையும்.
காற்றிலிருந்து தற்காலிகமாக பயிர்களை காக்க, கடைகளில் விற்கும் பச்சை நிற வலைகள் கொண்டு தடுக்கலாம். ஆனால் அவை தற்காலிக பாதுகாப்பு மட்டுமே; நிரந்தர பாதுகாப்பினை ஏற்படுத்த, சவுக்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே சிறந்த வழிமுறையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

விதைப்பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

அந்தியூர் பகுதி விவசாயிகள், நிலத்தில் விதைப்பண்ணை அமைத்து அதிக லாபம் ஈட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது. பாசன வசதி கொண்ட விவசாயிகள், விதைப்பண்ணை அமைக்கத் தேவையான ஆதார விதைகளை அரசு வழங்குகிறது. அவற்றை, வேளாண்துறை வழிகாட்டுதல் படி விதைக்க வேண்டும். முளைப்புக்கு பிறகு, விதை சான்றளிப்புத் துறையில் பதிவு செய்யப்படும். பின்னர் வேளாண்மைத்துறை மற்றும் விதை சான்றளிப்புத் துறை ஆலோசனைப்படி, பராமரித்து அறுவடை செய்ய வேண்டும். விதைகளை அதிக விலைக்கு வேளாண்மை துறையே கொள்முதல் செய்து கொள்ளும். விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் உண்டு. அந்தியூர் ஒன்றியத்தில் ராகி, உளுந்து, பாசிப்பயறு, தட்டை மற்றும் நிலக்கடலை அகியவற்றுக்கு விதைப்பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள், அந்தியூர் வட்டார விவசாய வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம் என, வேளாண் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Source : Dinamalar