Friday, August 12, 2016

சிக்கல் வேளாண். அறிவியல் நிலையத்தில் பழம், காய்கறி பதப்படுத்தும் பயிற்சி விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 20ம் தேதி கடைசி நாளாகும். இதுபற்றி சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அனுராதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தொழில்திறன் பயிற்சிகளை வழங்க உள்ளது. 

இதில், கிராமப்புற இளைஞர்கள், வேளாண்மை சார்ந்த பயிற்சி பெற விரும்புவோர் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 6ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்கள் பயிற்சியில் சேர தகுதியானர்வர்கள். பயிற்சி 6 மாத காலம் வழங்கப்படும். வார விடுமுறை நாட்களில் மாதம் ஒரு நேர்முகத்தேர்வு நடைபெறும். பதிவு கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். 
     
இப்பயிற்சியில், காளான் வளர்ப்பு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்துதல், திடக்கழிவு மறுசுழற்சி, மண் புழு உரம் தயாரித்தல், தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள், பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள், அங்கக வேளாண்மை, நவீன பாசன முறை மேலாண்மை, தரிசு நில மேம்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து கொள்ளலாம். சான்றிதழ் மூலம் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். 

இந்த சான்றிதழை தொழில் தொடங்க ஒரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக வைத்து கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர வருகிற 20ம் தேதி கடைசி நாள். மேலும் விவரங்களுக்கு 04365 246266 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது  சிக்கல் வேளாண். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்தோ தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அனுராதா தெரிவித்துள்ளார்.  

Source : Dinakaran

No comments:

Post a Comment