Wednesday, August 24, 2016

மண் மகத்துவம் அறியும் மண் ஆய்வு


t

மண்ணில் உள்ள பிரச்னைகளை அறிந்து சீர்திருத்தம் செய்யவும், சத்துக்களின் நிலை அறிந்து சமச்சீர் உரமிடவும், உரச் செலவை குறைத்து மகசூலை அதிகரிக்கவும் மண் ஆய்வு அவசியம். உரத்தேர்வு, உரமிடும் காலத்தை அறிந்திடவும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் பெற்றிடவும் மண் ஆய்வு அவசியமாகிறது.
மண் ஆய்வுக்கு ஏக்கருக்கு 10 முதல் 15 இடங்களில் இருந்து மண் மாதிரி சேகரிக்க வேண்டும். மரநிழல், வரப்பு வயலோரம், தண்ணீர் தேங்கும் பகுதி, எரு, உரம் கொட்டிய இடம், உரமிடப்பட்ட நிலம் ஆகியவற்றில் மண் மாதிரி சேகரிக்கக்கூடாது. நிலத்தை 'வி' வடிவில் வெட்டி மண் மாதிரி சேகரிக்க வேண்டும்.நெல், கம்பு பயிரிட நிலத்தில் பல இடங்களில் மண் மாதிரி சேகரிக்க வேண்டும். நிலக்கடலைக்கு அரை அடி ஆழம், பருத்தி, கரும்பு 4 அடி ஆழம், வளர்ந்த தென்னை பழப்பயிர் 2 அடி ஆழம் வரை நிலத்தை வெட்டி மண் மாதிரி சேகரிக்க வேண்டும். வெட்டப்பட்டுள்ள குழியின் இரு பக்கங்களிலும் கீழாக அரை அங்குல கனத்தில் மண்ணை செதுக்கி எடுக்க வேண்டும். சேகரித்த மண்ணை நன்றாக கலந்து கால்பங்கீட்டு முறையில் துணிப்பை, பாலிதீன் பையில் சேகரிக்க வேண்டும்.
நுண்ணுாட்ட மண் ஆய்வுக்கு மண்வெட்டி, தட்டு போன்ற உலோகப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மரக்குச்சி கொண்டு மண்ணை எடுக்க வேண்டும். பாசனநீர் பரிசோதனைக்கு ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து வர வேண்டும். மண் மாதிரி ஆய்வுக் கட்டணம் 20 ரூபாய் (பேரூட்டம் 10 ரூபாய், நுண்ணுாட்டம் 10 ரூபாய்). பாசன நீர் ஆய்வு கட்டணம் 20 ரூபாய். பழப்பயிர் நடுவதற்கு முன் 4 க்கு 3 என்ற அளவில் குழி வெட்டி அடிக்கு ஒரு மண் மாதிரி வீதம் குழிக்கு நான்கு மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.
- சே.கனகராஜ், திட்ட இயக்குனர்,
வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை, மதுரை
.

Source : Dinamalar

No comments:

Post a Comment