Wednesday, August 24, 2016

சிறுதானியம் பயிர் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

திருக்கோவிலூர் ஒன்றியம் ஜி.அரியூரில் வேளாண்மைத்துறை சார்பில் ஆட்மா திட்டத்தின் கீழ் பிரதான்மந்திரி கிரிஷிசஞ்சயி யோஜனா திட்டத்தின் கீழ் சிறுதானியம் பயிர் உற்பத்தி பற்றிய வேளாண்மை விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. சுமார் 300 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சிறுதானியங்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு பயிரிடப்பட்டுள்ள விவசாயிகளிடையே சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடலில் 75க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் புகழேந்தி விவசாயிகளை வரவேற்று சிறுதானிய உணவின் அவசியம், பயன்கள், சத்துக்கள் பற்றி விளக்கி கூறினார். அதனை தொடர்ந்து கம்பு சாகுபடியில் உற்பத்தியை பெருக்க ஏற்ற ரகங்கள், விதையளவு, விதை நேர்த்தி, விதை கடினப்படுத்துதல், நாற்றங்கால் அமைத்தல், கம்பு நடவு, பயிர் இடைவெளி, நீர், களை மற்றும் உரமேலாண்மை பற்றி வேளாண்மை அலுவலர் ராஜா விளக்கினார். கம்பில் உயிர் உரங்கள் விதை நேர்த்தி குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க பயிற்சியும் அளித்தனர்.

 வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணசாமி நுண்உரம், பயன்பாடுகள் பற்றியும், ஊட்ட மேம்பாடு பற்றியும் தொழுவுரம் தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்து கூறினார். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள், சிறுதானியத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி, பூஞ்சாண் கொல்லிகள் பற்றி உதவி வேளாண்மை அலுவலர்கள் ஞானவேல், குமார், மகாதேவன், மணிவேல், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் கூறினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி நன்றி கூறினார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment