Monday, August 1, 2016

தலைமுடி வளர உதவும் பச்சை பயறு



தலைமுடி கொட்டாமல் தடுப்பது, கருமையாக வளர்வது, மென்மையாக இருப்பதற்கான மருத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். தற்போது காற்று அதிகமாக வீசி வரும் நிலையில், தலைமுடியில் தூசி  படிந்து முடிகொட்டும். இதை தடுக்க தலையில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலைமுடி கொட்டுவதை தடுக்கும் மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் நெல்லி வற்றல், ஒரு ஸ்பூன் வெந்தயம் எடுத்து நீர்விட்டு நன்றாக ஊறவைத்து அரைத்து பசையாக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி தினமும் குடித்துவர முடி கொட்டுதல் நிற்கும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்காமல் குடிக்கலாம். முடி கொட்டுவதை தடுக்க ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது அவசியம்.

காராமணி, பச்சை பயறு ஆகியவற்றை  பயன்படுத்தி முடி வளர்வதற்கான உணவு தயாரிக்கலாம். வேகவைத்த காராமணி, முளைகட்டிய பச்சை பயறு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக உப்பு, மிளகுப்பொடி சேர்த்து கலந்து தினமும் 50 முதல் 100  கிராம் அளவுக்கு சாப்பிட்டுவர தலைமுடி நன்றாக வளரும்.
காராமணி, பச்சை பயறு அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது.

சத்தூட்டமான உணவாகிறது. உடலில் ஏற்படும் எரிச்சலை போக்கும். நொறுக்கு தீனிக்கு பதிலாக குழந்தைகளுக்கு பயறு வகைகளை கொடுத்து வந்தால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். தலைமுடியின் வேர் பலமாக இருப்பதற்கான தைலம் தயாரிக்கலாம். ஊறவைத்து அரைத்த பாதாம் பசையை எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து தைலப்பதத்தில் காய்ச்சவும்.

இதை ஆறவைத்து தலையில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால் தலைமுடியின் வேர் பலம் பெறும். முடி கொட்டுவது நிற்கும். தலைமுடி நீளமாக வளரும். எண்ணெய், மசாலா சேர்ந்த உணவுகளை  சாப்பிடும்போது ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்ப்போம். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சிறிது சீரகம், உப்பு சேர்த்து வெந்நீர் ஊற்றி கலந்து குடித்தால் நெஞ்செரிச்சல் சரியாகும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment