Monday, February 15, 2016

பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் தெளிக்க மானியம்: வேளாண் துறை தகவல்


பயறு வகைப் பயிர்களுக்கு டிஏபி கரைசல் தெளித்திட உரம் மற்றும் தெளிப்பு கட்டணம் ஹெக்டர் ஒன்றுக்கு 50 சதவீத பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குநர் சீ.இளவரசன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைப் பயிர்களில், பூக்கும் தருணத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக, பூக்கள் அனைத்துமே காய்களாவதில்லை. இதனால் அதிக மகசூல் பெற முடிவதில்லை.
 எனவே, பூக்கும் தருணத்தில் 2 சதவீத டிஏபி கரைசலை 15 நாள்கள் இடைவெளியில் தெளித்தால், அதிகமான பூக்கள் உருவாகி காய்களாக மாறுவதுடன், காய்கள் திரட்சியாக முழுமையாக காணப்படும். இதனால் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கும்.
 ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தினை, கரைசல் தெளிப்பதற்கு முதல் நாள் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இந்த கரைசலுடன் 40 மி.லி. பிளானோபிக்ஸ் சேர்த்து தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுவகை பயிர்களுக்கு டிஏபி கரைசல் தெளித்திட உரம் மற்றும் தெளிப்பு கட்டணம் உள்பட ஹெக்டேர் ஒன்றுக்கு 50 சதவீத பின்னேற்பு மானியமாக ரூ.650 வரை வழங்கப்படுகிறது. அண்ணாகிராமம் வட்டாரத்தில் உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் டிஏபி உரம் வாங்கியதற்கான பட்டியல் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன், உதவி வேளாண்மை அலுவலர் அல்லது அண்ணாகிராமம் மற்றும் புதுப்பேட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயனடையும்படி அதில் தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment