கோபி: சம்பா பருவத்துக்கு ஏற்ற
சான்று விதை இருப்பு உள்ளதாக, நம்பியூர் வேளாண் உதவி இயக்குனர் ஆசைதம்பி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறியதாவது: தற்போது
சம்பா பருவம் துவங்கி உள்ளது. கிணற்று பாசனத்துக்கும், கீழ்பவானி பாசன பகுதிகளுக்கும்
ஏற்ற, அரசு சான்று பெற்ற பல்வேறு நெல் ரகங்களை, குருமந்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில்
இருப்பு வைத்துள்ளோம். ஏ.டி.டி., 38 ரகம் - 4,500 கிலோ, கோ., 43 ரகம் - 1,000 கிலோ
இருப்புள்ளது. சம்பா மற்றும் பின் சம்பா பருவத்துக்கு ஏற்ற கோ.ஆர்., 50 என்ற புதிய
நெல் ரகம் நம்பியர் வட்டாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, 135 முதல், 140
நாள் சாகுபடியாகும். இந்த ரகம், வேளாண் பல்கலைக்கழகத்தால், 2010ல் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டு விதைப்பண்ணை அமைத்து கொள்முதல் செய்யப்பட்டதில், ஏக்கருக்கு, மூன்றரை டன்களுக்கு
அதிகமான மகசூல் கிடைத்தது. இதற்கு ஒரு கிலோவுக்கு, 10 ரூபாய் அரசு மானியம் வழங்குகிறது.
கோ.ஆர்., 50 நெல், ஏழு டன், பி.பி.டி., 5204 ரகம், ஏழு டன் உள்ளன. கடந்தாண்டில், நெல்
விதைகளை விதை நேர்த்தி செய்யாமல், நாற்றங்கால் அமைத்ததால், விதை மூலம் பல்வேறு நோய்களால்,
மகசூல் குறைந்து காணப்பட்டது. எனவே அனைத்து விவசாயிகளும், எல்லா ரகங்களுக்கும் விதை
நேர்த்தி செய்து, தண்ணீரில் ஊற வைத்து, அதன்பின்பு நாற்றங்கால் அமைக்க வேண்டும். இதற்கு,
ஒரு கிலோ நெல் விதைக்கு, இரண்டு கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைசைக்ளோஜோல் மருந்து,
இவற்றில் ஏதேனும் இரண்டை நன்கு கலந்து, ஒரு நாள் வைத்திருந்து, பின்பு நீரில் ஊற வைக்க
வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment