Thursday, September 3, 2015

விசை உழுவை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் கலெக்டர் தகவல்



நெல்லை, :  தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விசை உழுவை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் அதிகபட்ச மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டத்திற்கு தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் விசை உழுவை இயந்திரம் வாங்க ரூ.40 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. அதன்படி 8 குதிரை சக்திக்கு குறைவான விசை உழுவை இயந்திரத்திற்கு சிறுகுறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்ச மானியமாக ரூ.50 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரமும் பணி முடிவு மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

8 குதிரை சக்திக்கு அதிகமான மின் உழுவை இயந்திரம் வாங்க சிறுகுறு மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிகபட்ச மானிய தொகையாக ரூ.75 ஆயிரம் (ஒரு இயந்திரத்திற்கு) வழங்கப்பட உள்ளது. இதர விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரமும் அதிகபட்ச மானியமாக வழங்கப்பட உள்ளது.விசை உழுவை இயந்திரம் வாங்க விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

வேளாண் பொறியியல் துறை, தலைமை பொறியாளர் அங்கீகரித்துள்ள நிறுவனங்களில் தங்கள் விருப்பப்படி ஏதேனும் ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தில் விசை உழுவை இயந்திரத்தை முழு விலையில் வாங்கி அதற்குரிய விலைப்பட்டியல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் தகுதியான விவசாயிகளுக்கு மானியம் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=486827&cat=504

No comments:

Post a Comment