Monday, September 7, 2015

ரூ. 6.77 கோடி மானியத்தில் 313 கறிக்கோழிப் பண்ணைகள்


பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 6.77 கோடி மானியத்துடன் 313 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரணாரை, குரும்பலூர், அம்மாபாளையம், எசனை, லாடபுரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கறிக்கோறிப் பண்ணைகளை வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் 2012 -13 ஆம் ஆண்டில் 5,000 கோழிகள் கொண்ட பண்ணை அமைக்க, ஒரு கோழிப் பண்ணைக்கு ரூ. 8.25 லட்சம் வங்கிக்கடனாக வழங்கப்பட்டு, மாநில அரசின் மானியமாக ரூ. 2.06 லட்சம் வீதம் 163 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ. 3.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் 2013 -14ஆம் ஆண்டில் 100 பண்ணைகள் அமைக்க ரூ. 2.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014 -15 ஆம் ஆண்டில் 5,000 கோழிகள் கொண்ட கோழிப்பண்ணை அமைக்க ஒரு பண்ணைக்கு ரூ. 10.75 லட்சம் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு மாநில அரசு மானியமாக கோழிப்பண்ணை ஒன்றுக்கு ரூ. 2.68 லட்சம் வீதம் 100 கோழிப் பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ. 2.68 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2015 -16 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை ஒன்றுக்கு வங்கிக்கடனாக ரூ. 10.75 லட்சம் வங்கிக் கடனாக வழங்கப்பட்டு மானியமாக ஒரு பண்ணைக்கு ரூ. 2.68 லட்சம் வீதம் 50 கோழிப்பண்ணைகள் அமைக்க ரூ. 1.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 2012 - 13 முதல் 2015 - 16 வரை 413 கோழிப்பண்ணைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 313 பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 100 பண்ணைகளில், 70 பண்ணைகளுக்கு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 30 பண்ணைகளுக்கு வங்கி மூலம் கடன் அளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கறிக்கோழிப் பண்ணைகளை அதிகளவில் அமைத்து பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும். கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவ அலுவலர்களிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர்.
ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ஜி. அப்சல், சிறப்பறிஞர் ப. மோகன், உதவி இயக்குநர் ம. மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


http://www.dinamani.com/edition_trichy/perambalur/2015/09/05/%E0%AE%B0%E0%AF%82.-6.77-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-313-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/article3011554.ece

No comments:

Post a Comment