திருத்தணி: மாவட்டத்தில் விவசாயிகள்
நெல் பயிரிடுவதை ஊக்குவிக்கவும், மண்வளத்தை மேம்படுத்தவும், வேளாண் துறை, இரண்டரை ஏக்கருக்கு,
2,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, நடப்பாண்டில், 3,952 ஏக்கரில் பசுந்தாள் உரப்பயிர்
சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள,
14 ஒன்றியங்களில், இரண்டு லட்சம் விவசாயிகள் நெல் பயிடுகின்றனர். நெற்பயிர் செய்வதற்கு
போதிய அடியுரம் இல்லாததால், நெல் விளைச்சல் குறைவதால், பெரும்பாலான விவசாயிகள் கரும்பு,
வேர்க்கடலை, சவுக்கு மற்றும் காய்கறி போன்ற மாற்று பயிர் செய்கின்றனர்.
இதையடுத்து வேளாண் துறை, விவசாயிகள்
அதிகளவில் நெல் பயிரிடும் வகையிலும், மண்வளத்தை மேம்படுத்தவும், கடந்த ஆண்டு முதல்,
நெற்பயிருக்கு அடியுரமான பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய வேளாண் துறை, தேசிய வேளாண்மை
வளர்ச்சி திட்டத்தின் கீழ், இரண்டரை ஏக்கருக்கு, 2,000 ரூபாய் வீதம் ஊக்கத் தொகை மற்றும்
விதைகள் மானிய விலையில் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டில், மாவட்டத்தில்,
1,500 ஏக்கரில் பசுந்தாள் உரப்பயிர் செய்வதற்கு வேளாண் துறை ஊக்கத்தொகை வழங்கியது.
மேலும், அதற்கான விதைகள் வெளி மாவட்டத்தில் இருந்து வாங்கி, மானிய விலையில் விவசாயிகளுக்கு
வழங்கி ஊக்குவித்தது. விவசாயிகளும் ஆர்வத்துடன் பசுந்தாள் உரப்பயிரான சணப்பு, தக்கைபூண்டு
ஆகியவற்றை பயிரிட்டனர்.
இந்த பயிர், 4,0-60 நாட்களுக்குள்
வெட்டி, நிலத்திற்கு உரமாக பயன்படுத்தினர் (அதாவது பயிர் பூ பூக்கும் தறுவாயில், அதை
வெட்டி உரமாக பயன்படுத்த வேண்டும்). இதனால், நெல் பயிரிட்ட விவசாயிகள் மகசூலை உயர்த்தியதை
தொடர்ந்து, அனைத்து விவசாயிகளும் பசுந்தாள் உரம் பயிரிட விரும்பினர்.
3,952 ஏக்கரில்...
நடப்பாண்டில், மாவட்டத்தில்,
3,952 ஏக்கரில் பசுந்தாள் பயிரிட, 1,600 விவசாயிகளுக்கு, 2,000 ரூபாய் வீதம், மொத்தம்,
32 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேளாண் துறையினர் தீர்மானித்துள்ளனர். ஆனால், விவசாயிகள்
பசுந்தாள் விதைகள் வெளி மார்க்கெட்டில் இருந்து வாங்கி பயிரிட வேண்டும். விதைகள் வழங்காததற்கு
காரணம், மாவட்டத்தில் விதை பண்ணை இல்லாததால், விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படவில்லை.
வங்கிகள் மூலம்...
இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குனர்
ஒருவர் கூறியதாவது: நடப்பாண்டில், 14 ஒன்றியத்தில் உள்ள, 1,600 விவசாயிகளுக்கு, இரண்டரை
ஏக்கருக்கு, 2,000 ரூபாய் ஊக்கத்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரிடையாக அனுப்பப்படும்.
குறைந்தபட்சம் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
ஒரு விவசாயிக்கு இரண்டரை ஏக்கருக்கு மேல் வழங்கப்படமாட்டாது. மேலும், பசுந்தாள் பயிரிட்ட
விவசாயிகள், அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் கூறி, பசுந்தாள் பயிருடன் விவசாயி
நிற்பது போல் புகைப்படம், நிலத்தின் சிட்டாவுடன் இம்மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றியம் ஏக்கர்
திருத்தணி- 123.50
திருவாலங்காடு 160.55
பள்ளிப்பட்டு- 79.04
ஆர்.கே.பேட்டை 98.80
அம்பத்துார்- 86.45
பூந்தமல்லி- 172.90
புழல்- 12.35
சோழவரம் 605.15
மீஞ்சூர்- 741.00
கும்மிடிப்பூண்டி 518.70
திருவள்ளூர்- 296.40
கடம்பத்துார் 247.00
பூண்டி- 291.46
எல்லாபுரம் 518.70
No comments:
Post a Comment