Wednesday, September 2, 2015

ஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம்




ஏலச்செடிகளுடன் காளான் வளர்ப்பு என்ற கொள்கையை பரிசோதித்து வெற்றி பெற்றுள்ளார் மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் முனைவர் ராஜேந்திரன். இது பற்றி அவர் கூறுகையில், ஏலத்தோட்டங்களில் நிலவும் காலச் சூழ்நிலையையும் சீதோஷண நிலைகளைப் பயன்படுத்தி குடில்கள் அமைக்காமல் இயற்கையில் ஏலச்செடிகளுடன் காளான் வளர்த்து ஏல விவசாயத்தை மிகவும் லாபகரமாகவும், ஆர்கனிக் முறைக்கு மாற்றும் முயற்சி இது. இம்முறையை பின்பற்றும் போது அது விவசாயிகளுக்கு பலவகை நன்மைகளை தருகிறது. குறைந்த செலவில் அதிக வருமானம் பன்மடங்காக உயர்கிறது. காளான் அறுவடை செய்தப்பின் கிடைக்கும் காளான் மைசீலியக் கழிவுகள் செடிகளுக்கு அடியில் இருக்கும் போது அது அழுகல் நோயை உண்டாகக்கூடிய பித்தியம், மற்றும் ரைசோகாட்டலின் போன்ற பூஞ்சைகளைக் கட்டுப்படுத்தி செடிகளை நோய் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதுடன் அதிக அளவு மகசூலையும் கொடுக்கிறது.
பல்வேறுப்பட்ட இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்ததின் விளைவாக மண்ணில் ஏற்பட்டுள்ள இரசாயன மாற்றத்தையும் மண்ணில் குவிந்துள்ள பயன்படுத்திய இரசாயனங்களையும் உறிஞ்சி மண்ணின் தன்மையை தாவர வளர்ச்சிக்கேற்ற வகையில் மாற்றுகிறது. அதேபோல் பல வீரியம் மிக்கப் பூசனக் கொல்லிகளை ஏலச் செடிகளுக்கு பயன்படுத்துவதால் அது ஏலத்தோட்டங்களிலுள்ள அனைத்து வகை நன்மை செய்யும் பூஞ்சைகளையும் அழித்து விடுவதால் மண்ணில் நடைபெற வேண்டிய மினரல் (சத்துக்களின்) சுழற்சி தடைபட்டு மண்ணின் உயிர்தன்மை இழந்து வருகிறது.
பேராசிரியரின் இப்புதுமை திட்டத்தை பயனாளிகளின் கைகளுக்கு கிடைக்கச் செய்யும் முயற்சிகளை மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் கிளீன் மற்றும் கிரீன் எண்விரான்மெண்ட் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. சோதனை முறையாக சுமார் ஒரு ஏக்கர் ஏலப்பயிருடன் காளான் வளர்ப்பை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செய்து வருகிறது. இம்முறை பற்றி பிற தகவல்களுக்கு 94863 26193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
 டாக்டர் கு.ராஜேந்திரன்,
பேராசிரியர் தாவரவியல் துறை,
சரஸ்வதி நாராயணன் கல்லூரி,
மதுரை.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26698&ncat=7

No comments:

Post a Comment