Tuesday, June 7, 2016

நோய் தாக்காத நெல் ரகத்துக்கு விவசாயிகள் மாறுங்க... கலப்பு விதையால் முளைப்பு திறன் குறையும்


பி.பி.டி., எனப்படும் டீலக்ஸ் ரகத்தையே விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக பயிரிடுவதால், 20 முதல் 30 சதவீத இழப்பை சந்திக்கின்றனர். இதனால், இந்த ஆண்டு மாற்று ரகத்துக்கு மாறுங்க... என விவசாயிகளை வேளாண்துறை வேண்டி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 90 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மானாவாரியாக நெல் பயிரிடப்படுகிறது. இவற்றில் அதிக பட்சமாக பி.பி.டி., எனப்படும் சன்ன ரகமான டீலக்சையே பயிரிடுகின்றனர். இந்த ரகம் 1985-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. விதையின் முளைப்பு தரம் குறைந்து விட்டதால், கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே இதற்கான மானியம் வழங்குவதை வேளாண்துறை நிறுத்தி விட்டது.
ஆனால், அரிசி ஆலைகள் இந்த ரகத்தையே விரும்புவதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில் உள்ள விதைகளையே மறுபடியும், மறுபடியும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், குலைநோய், இலை கருகல் நோய் தாக்குதலுக்கு நெற் பயிர்கள் உள்ளாகி, 20 முதல் 30 சதவீதம் வரை ஒவ்வொரு விவசாயிக்கும் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு தஞ்சாவூரில் தொடங்கிய இலை கருகல் நோய் செங்காத்தங்குடி, பெரியகோட்டை வரை நீடித்தது. சாக்கோட்டை பகுதியில் 2 ஆயிரம் எக்டேர் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது: விவசாயிகள் இந்த ஆண்டாவது மாற்று ரகங்களான கோ.51, டி.கே.எம்.13 போன்ற புதிய ரகங்களை தேர்வு செய்து, தரமான விதை சான்று பெற்ற விதைகளை வாங்கி நெல் பயிரிட வேண்டும்.
தரமான விதைகளை வாங்குவதன் மூலம் முளைப்புதிறன் அதிகமாகவும், வீரியமாகவும், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு தன்மை கொண்ட பயிர்களை உருவாக்கலாம்.
தரமற்ற சான்றில்லாத விதைகளையோ, தன்னிடம் உள்ள பழைய விதைகளையோ பயன்படுத்தும்போது கலப்பு அதிகமாகவும், முளைப்பு திறன் குறைந்ததாகவும் இருக்கும்.
மக்களும் டீலக்ஸ் என்ற ஒரே ரகத்தின் மாயையை விடுத்து சத்துள்ள பல்வேறு ரகங்கள் உள்ளன என்பதை தெரிந்து, அவற்றை சாப்பிட வேண்டும், என்றார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment