Friday, June 24, 2016

உரம் விற்பனையை கண்காணிக்க புதிய செயலி: விற்பனையாளர்களுக்குப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் உரம் இருப்பு மற்றும் விற்பனையை கண்காணிக்கவும் விவசாயிகளுக்கு உர மானியத்தை நேரடியாக வழங்கவும் புதிய செல்லிடப்பேசி செயலி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக உர விற்பனையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் விழுப்புரம் வேளாண்மைத் துறை அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்றது.
 தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனையாளர்களுக்கு நடைபெற்ற இப்பயிற்சிக் கூட்டத்தை ஆட்சியர் எம்.லட்சுமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:
 தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு உர சில்லறை விற்பனையாளர்கள் மூலம் ரசாயன உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 
 உரங்கள் விநியோகத்துக்கான மானியத் தொகை முழு விலையில் கழிக்கப்பட்டு, மீதமுள்ள தொகை மட்டும் வசூல் செய்யப்படுகிறது.
 இவ்வாறு விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட மானியத் தொகை, உரத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பட்டியலாகப் பெறப்பட்டு, வேளாண்மைத் துறை மூலம் பரிசீலிக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
 இந்த நடைமுறையால் விவசாயிகளுக்கு மானியம் நேரிடையாக சென்றடைவதில் சில முறைகேடான இழப்பீடுகள் நிகழ்வது மட்டுமல்லாமல், அரசுக்கு கூடுதல் நிதி செலவினமும் ஏற்படுகிறது.
 எனவே விவசாயிகளுக்கு நேரடி மானியத்தை எளிதாக வழங்கும் பொருட்டு, தற்போதுள்ள நிலையை மாற்றி, மத்திய அரசின் புதிய உர மானிய கொள்கைப்படி முதல் கட்டமாக "மொபைல் பேஸ்டு பெர்டிலைசர் மானிட்டரிங் சிஸ்டம்' எனும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள தனியார், கூட்டுறவு உர சில்லரை விற்பனையாளர்கள், செல்லிடப்பேசி செயலி மூலம் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு நேரடியாக மானியம் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
 இதன் மூலம், உர விற்பனையாளர்களின் உர இருப்பு மற்றும் விற்பனையை வாரந்தோறும் பதிவு செய்து கண்காணித்தல், இரண்டாம் கட்டமாக விவசாயிகளுக்கு உர மானியத்தை நேரடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதற்கான பயிற்சி, உர விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது என்றார். கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநர் ஆ.ரத்தினசபாபதி, துணை இயக்குநர்கள் ரவி, விஜயகுமார், ராமலிங்கம், கனகசபை, கென்னடி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 முன்னதாக, தூய்மை இந்தியா திட்டத்தில், வேளாண் துறை வளாகத்தை தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சியும், அங்கு மரக்கன்றுகளும் நட்டனர்.
 

Source : Dinamani

No comments:

Post a Comment