Friday, June 24, 2016

உவர் நிலங்களில் சணப்பு பயிரிட்டால் மண் வளம் மேம்படும் வேளாண் அதிகாரி விளக்கம்

மண்வளம் மேம்பட பசுந்தாளுர பயிரான சணப்பு பயிர் சாகுபடி செய்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழ வேண்டும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார். இது குறித்து திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. இடைவெளிவிடாது தொடர்ந்து நிலத்தில் பயிர்கள் சாகுபடி செய்து வருவதால் மண்ணின் மேற்பரப்பில் உள்ள சத்துக்கள் குறைந்து வளமற்ற தன்மையினை அடைவதுடன் மண்ணின் பவுதிக மற்றும் ரசாயன அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் சாகுபடிக்கு பயனற்ற நிலமாக மாறுகிறது. 

எனவே, மண்ணின் வளம் குன்றாமல் இருக்க தொடர்ந்து ஒரே வகை பயிரை சாகுபடி செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மாற்று பயிரினை சாகுபடி செய்து பயிர் சுழற்சி முறையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தற்சமயம், திருவோணம் வட்டாரத்தில் குறுவை சாகுபடி செய்யப்படும் இடங்கள் போக மீதியுள்ள ஒருபோக சம்பா சாகுபடி செய்யப்படும் இடங்கள் பெரும்பாலும் தரிசாகவே உள்ளது. அதுபோன்ற இடங்களிலும், பயிர் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவு உண்டாகக் கூடிய களர் -உவர் நிலங்களிலும், தென்னை சாகுபடி செய்துள்ள தோப்புகளிலும் பசுந்தாளுரப் பயிரான சணப்பு பயிரிடுவதற்கு இக்கோடைப்பருவமே ஏற்ற தருணமாகும். 

தற்சமயம் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இம்மழையின் ஈரத்தை பயன்படுத்தி சணப்பு பயிர் பயிரிட்டு சரியாக 45 நாள் கழித்து பூக்கும் தருணத்தில் டிராக்டர் கொண்டு மடக்கி உழுது பசுந்தழை பயிரினை நன்கு உழுது மக்கச் செய்ய வேண்டும். இதனால் சீர்கெட்டு கிடக்கும் எவ்வகையான நிலமும் இயற்கை வளம் நிறைந்த நிலமாக மாறும். மண்ணில் காற்றோட்டம் சீராக இருக்கும். அங்கக உயிரினங்களின் பெருக்கம் அதிகரிக்கச் செய்யும். மண்ணின் பௌதீக மற்றும் இரசாயன மாற்றங்கள் நிலை நிறுத்தப்படும். 

மண்ணில் நீர்பிடிப்புத் தன்மை அதிகரிக்கச் செய்யப் பெற்று நீண்ட நாட்கள் ஈரத்தன்மை காக்கப்படும். இதற்கு 20 கிலோ சணப்பு விதையினை ஒரு ஏக்கரில் விதைப்பு செய்யவேண்டும். இதற்கு 50 சத மானியமும் அளிக்கப்படுகிறது. 20 கிலோ விதையின் மொத்த மதிப்பு ரூ ஆயிரத்து 100 ஆகும். இதில் 50 சத மானியத்தொகை ரூ 550 போக மீதி தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதும். தேவையான சணப்பு விதைகள் திருவோணம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment