Friday, June 24, 2016

அடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் கலெக்டர் பழனிசாமி தகவல்



அடர் நடவு தொழில் நுட்பத்தில் அதிக லாபம் பெறலாம் என்று நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

தமிழக முதல்-அமைச்சரின் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் மூலம் துரிதப்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை வேளாண்மை கோட்டத்தில் நடப்பு 2016-17-ம் ஆண்டு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறையில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 3 ஆயிரம் ஏக்கரில் எந்திரம் மூலம் நடவுப்பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை மூலம் ‘மா‘ அடர் நடவு திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை அருகே குளிச்சாறு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் மா மரம் அடர் நடவு முறையில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பணியை நாகை மாவட்ட கலெக்டர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிக லாபம்

அடர் நடவு முறையில் ஹெக்டேருக்கு 100 மரக்கன்றுகளுக்கு பதிலாக 400 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்த தொழில் நுட்பத்தில் இளம் மரக்கன்றுகள் பராமரிப்பு மற்றும் கவாத்து மூலம் கிளைகளின் வளர்ச்சி, வேரின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு 40 சதவீதம் முதல் அதிக லாபம் பெற வழி வகுக்கிறது. மேலும், நோய், பூச்சி தாக்குதல்களை எளிதாக கட்டுப்படுத்த முடியும். நன்செய் நிலத்தில் மா அடர் நடவு மூலம் அதிக லாபம் பெறலாம். எனவே, மேற்கண்ட நடவு திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெற்று பயனடைய தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை சந்தித்து பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்றார். மேலும், மயிலாடுதுறை கோட்டத்தில் நெல் நுண்ணூட்டம் 6 ஆயிரத்து 600 ஏக்கர் அளவிலும், துத்தநாகசத்து 8 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும், 50 நீர் கொண்டு செல்லும் குழாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் சேகர், உதவி கலெக்டர் சுபாநந்தினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், மேலாண்மை பொறியியல் துறை துணை செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறியாளர் சுகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

source : Dailythanthi

No comments:

Post a Comment