Monday, June 20, 2016

பர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு வேளாண் துணை இயக்குநர் ஆய்வு

பர்கூர் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு நடைபெறுவதை வேளாண்மை துணை இயக்குநர் நேரடியாக ஆய்வு செய்தார். பர்கூர் வட்டம், ஒரப்பம் கிராமத்தில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி இயந்திரம் மூலம் வேர்க்கடலை விதைப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவுரைப்படி, வேளாண்மை துணை இயக்குநர் திருமுருகு ஆய்வு செய்தார். அப்போது பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் விஜயன், கோவிந்தன் மற்றும் முருகன் ஆகியோர் உடனிருந்தனர். 

இது குறித்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் கூறியதாவது: 2016-17ம் ஆண்டு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம், எண்ணெய்வித்து இயக்கத்தின் கீழ் விதைப்பு கருவி மூலம், நிலக்கடலை விதைக்கும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 எக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. கருவி மூலம் விதைப்பு செய்வதற்கான வாடகை ரசீது, சிட்டா, ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகல், ஆதார் அட்டை இருந்தால் அதன் நகல் ஆகியவற்றுடன் வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்ய வேண்டும். 

மேலும் நிலக்கடலை இயந்திரம் மூலம் விதைப்பு செய்வதால் சரியான இடைவெளி, ஆழத்தில் விதைப்பு முளைப்பு திறன் அதிகரிக்கிறது. இதனால் வயலில் சரியான பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு விளைச்சல் அதிகரிக்கிறது. தற்போது நிலவும் கூலி உயர்வுடன் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க வேளாண்மையில் இயந்திரங்களை பயன்படுத்துதல் மிக அவசியம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை அனைத்து விவசாயிகளும் கடைபிடித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

source : Dinakaran

No comments:

Post a Comment