Wednesday, June 22, 2016

கரும்பில் சுடுமல்லி ஒட்டுண்ணி நோய் மேலாண்மை!



தருமபுரி: கரும்பின் வேர்ப் பகுதியைச் சுற்றி வளரக் கூடிய சுடுமல்லி எனும் ஒட்டுண்ணி களையானது கரும்பு சாகுபடியை வெகுவாகப் பாதிக்கும். இதைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெற பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய முனைவர்கள் ம.சங்கீதா, பா.ச.சண்முகம் ஆகியோர் கூறும் வழிமுறைகள்:
கரும்புப் பயிரின் வேர்ப் பகுதியைச் சுற்றி வளரக்கூடிய ஒட்டுண்ணி களை என்பது சுடுமல்லி ஆகும். இந்த களைச் செடியானது தனக்கு தேவையான நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பயிர்களிலிருந்து பெற்றுக்கொண்டு வளரும். இந்த களைச் செடியின் விதைகள் கரும்பு நடவு செய்த 10 நாள்களுக்குப் பிறகு கரும்பு பயிர்களின் வேர்களிலிருந்து வெளிப்படக் கூடிய வேதிப்பொருளின் தூண்டுதலால் முளைக்க ஆரம்பிக்கும்.
இவற்றின் விதைகள் மண்ணில் 40 செ.மீ. ஆழத்தில் முளைத்து, மண்ணுக்கு அடியில் தண்டு மற்றும் வேர்ப்பகுதிகளை உருவாக்கும். இந்த செடியானது 3-7 நாள்கள் வரை தனித்து வளரும். இதன் தண்டுப் பகுதியிலிருந்து ஹாஸ்டோரியா எனும் குழாய் போன்ற அமைப்பை உருவாக்கி, பயிரின் வேர்ப் பகுதிக்குள் ஊடுருவி வளர ஆரம்பிக்கும். இவை கரும்புப் பயிரிலிருந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை உறிஞ்சிக் கொண்டு வளரும். இந்த ஒட்டுண்ணிக் களையானது மண்ணின் அடிப்பாகத்தில் 4-8 வாரங்கள் வரை வளர்ந்து, பின்பு மண்ணின் மேற்பகுதியில் சிறிய பச்சை நிற இலைகளைத் தோற்றுவிக்கும். பிறகு இவை சிவப்பு மற்றும் வெள்ளை நிறப் பூக்களைத் தோற்றுவித்து, செடிக்கு 1-15 விதைகளை உருவாக்கும். இந்த விதைகள் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். எனவே, நீர், காற்று மற்றும் மனிதர்கள் வாயிலாக எளிதில் மற்ற இடங்களுக்குப் பரவும். இவற்றின் விதைகள் மண்ணில் 10-15 ஆண்டுகள் வரை நல்ல முளைப்புத் திறனுடன் இருக்கும்.
கரும்பில் இந்த ஒட்டுண்ணி களையின் பாதிப்பு கரும்பு பயிர் பாதிக்கப்பட்ட பின்பு, அதாவது களை முளைத்து 4-8 வாரங்களுக்குப் பிறகுதான் வேர்ப்பகுதியைச் சுற்றி தெரியவரும். அவ்வாறு, தெரியவரும்போது, அவை பயிரில் பாதிப்பை ஏற்படுத்தி பயிரில் மகசூல் இழப்பை ஏற்படுத்திவிடும்.
இந்தக் களையானது நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை பயிர்களிலிருந்து பெற்றுக் கொள்வதால், கரும்பின் வளர்ச்சி குறைந்து, பழுப்பு நிறமடைந்து, காய்ந்து விடும்.
இந்த அறிகுறிகள் பயிர்களில் தென்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வறட்சி பாதிப்பினால் ஏற்படும் அறிகுறிகள் போன்று காட்சியளிக்கும்.
கரும்பில் சுடுமல்லியின் பாதிப்பால் 20-70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த ஒட்டுண்ணிக் களையானது சோளம், மக்காச்சோளம் மற்றும் நெல் ஆகிய தானியப் பயிர்களில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போது இந்த ஒட்டுண்ணி களைச்செடியின் பாதிப்பு தருமபுரி மாவட்டத்தில் பரவலாகத் தென்படுகிறது.
கட்டுப்படுத்தும் முறைகள்: சுடுமல்லி ஒட்டுண்ணி களை வகையைச் சார்ந்தது. கரும்பில் இதன் பாதிப்பினை முற்றிலுமாக அகற்ற இயலாது. ஆகையால், களைகளின் எண்ணிக்கையும் பாதிப்பையும் குறைக்க இயந்திர, ரசாயன மற்றும் உயிரியல் முறை ஆகியவை இணைந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் ஆகும்.
கரும்பு நடவு செய்யும்போது நல்ல சுத்தமான சுடுமல்லி பாதிக்காத வயல்களிலிருந்து விதை (அ) விதைக்கரணைகளைச் சேகரித்து உபயோகிக்க வேண்டும்.
வயல்வெளியை களைகள் இல்லாமல் கைக்களை (அ) இயந்திரங்களைக் கொண்டு களை எடுத்து சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
சுடுமல்லி களையானது விதைகள் மூலம் பெருக்கம் அடையக் கூடியது. எனவே, பூ பூப்பதற்கு முன்பு கையினால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். தாமதப்படுத்தும்போது, அதாவது பூ பூத்த 2-3 வாரங்களில் விதைகள் உருவாகிவிடும். அந்த தருணத்தில் விதைகள் செடியிலிருந்து மண்ணில் விழாதவாறு பிடுங்கி எடுத்துவிட வேண்டும். இவ்வாறு, செய்வதன் மூலம் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் இந்த களைச் செடிகளின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பு குறைந்துவிடும்.
இந்த ஒட்டுண்ணிக் களைச் செடியை கையினால் நீக்கும்போது மீண்டும், மீண்டும் அதிகளவில் தூர்களுடன் வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, இதற்கு பதிலாக 2, 4, டி சோடியம் உப்பு என்ற களை முளைத்த பின்பு இடும் களைகொல்லியை லிட்டருக்கு 5 கிராம் என்றளவில் செடிகளின், மீது நன்றாகப் படும்படி கைத்தெளõப்பான் கொண்டு தெளõக்க வேண்டும். இவ்வாறு தெளõப்பதன் மூலம் களைகளின் மேற்பக்க வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, விதை உற்பத்தியைத் தடைபடுத்துவதன் மூலம் களைகளின் எண்ணிக்கை மற்றும் பாதிப்பை கரும்பு மற்றும் அடுத்து சாகுபடி செய்யக்கூடிய பயிர்களில் தடுக்கலாம்.
மண் வளம் குறைந்த நிலங்களில் குறிப்பாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்து குறைபாடுள்ள நிலங்கள் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட நிலங்களில் சுடுமல்லியின் பாதிப்பு அதிகம் தென்படும். எனவே, தொழு உரம், கம்போஸ்ட், தழைச்சத்தினை அளிக்கக்கூடிய ரசாயன உரங்கள் ஆகியவற்றை இட்டு மண் வளத்தை அதிகரித்து, பயிரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் வாயிலாக சுடுமல்லியின் வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கலாம்.
தானியப் பயிர்களான நெல், கரும்பு, சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்களை தொடர்ந்து, சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
பயிர் சுழற்சி முறையில் தட்டைப்பயிறு, நிலக்கடலை, சோயா பீன்ஸ் ஆகிய மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தக் கூடிய பயறு வகைப் பயிர்கள் ஆகிய பயிர்களைச் சாகுபடி செய்வதன் மூலம் சுடுமல்லியின் முளைப்புத் திறன் தடுக்கப்படுகிறது. மேலும், இவ் வகைப் பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யும்போது சுடுமல்லியின் வளர்ச்சி தடைபடுகிறது.
பயிர்களைச் சாகுபடி செய்வதற்கு முன்பு சுடுமல்லி பாதிக்கப்பட்ட வயலில் அதன் முளைப்புத் திறனை ஊக்குவிக்கும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யக்கூடிய பயிர்களான சோளம், மக்காச்சோளம் மற்றும் நெல் ஆகியவற்றை சாகுபடி செய்து களைச் செடிகளை முளைக்க வைத்து பூ பூப்பதற்கு முன்பு மண்ணில் மடக்கி உழவு செய்து விட வேண்டும் (அ) அழித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் களைகளைக் கட்டுப்படுத்தி, நல்ல மகசூலைப் பெற முடியும் என்றனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment