Tuesday, June 21, 2016

தென்னையில் சாதனை படைக்கும் மகாலிங்கம்



தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் தென்னை மரம் வளர்க்கப்படுகிறது. எனினும் 'உழுதவனுக்கு உழக்கு கூட மிஞ்சாது' என கூறுவர். இதை மெய்ப்பிக்கும் வகையில் தான் தென்னை விவசாயமும் உள்ளது. பருப்பு பிடித்த தேங்காய்களை மரத்தில் இருந்து வெட்டி எடுக்க மரம் ஒன்றுக்கு தனி கூலி. தேங்காய் மட்டை உரிக்க காய் ஒன்றுக்கு தனி கூலி. மட்டை உரித்த காய்களை தரம் பிரிக்க தனி கூலி. தேங்காய் கமிஷன் புரோக்கர் காய்களை தரம் பிரிக்கும்போது கழிவுக்காய் என ஆயிரம் காய்களில் 100 முதல் 150 காய்களை கழிப்பார். அதை கையோடு எடுத்து கொள்வார். கழிவு காய்களுக்கு புரோக்கர் நிர்ணயிக்கும் விலையே இறுதி. தவிர ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி தனி. தென்னையை வளர்த்து, ஆளாக்கி, உருவாக்கி, காய்களை பறித்து, மட்டை உரித்து, விற்பனை செய்து, காசாக்குவதற்குள் விவசாயி படும்பாடு சொல்லி மாளாது. 
தென்னை விவசாயத்தில் தனக்கென தனி பாணியை உருவாக்கி லாபம் ஈட்டுகிறார், மதுரை மாவட்டம் சாத்தையாறு அணை பகுதியை சேர்ந்த தென்னை விவசாயி ஏ.மகாலிங்கம். இவர் மின் வாரியத்தின் தேர்வு நிலை உதவி செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 70 வயது நிரம்பிய இவர், இளைஞர் போல் சுறுசுறுப்பாக விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். தென்னை விவசாயத்தில் புதுமையை புகுத்தியது குறித்தும், ஈட்டிய லாபத்தில் தென்னை தோட்டங்களை வாங்கி வருவது குறித்தும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

அவர் கூறியதாவது: சாத்தையாறு அணை அருகே 6 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்கிறேன். நெட்டை ரகத்தில் 600 மரங்கள் உள்ளன. காய்ப்பு மரம் 500 உள்ளன. 45 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பருக்கும். தேங்காய் மண்டி புரோக்கர் நிர்ணயிக்கும் விலை சீசனுக்கு ஏற்ப 1000 காய்கள் ரூ.3500. இதில் 100 காய்கள் கழிவாக கணக்கிடுவார். அதற்கு மிக குறைந்த விலை நிர்ணயிப்பார். இதை தவிர்க்க தேங்காய் பறிப்பு, மட்டை உரிப்பு, தரம் பிரிப்பு என அனைத்து பணிகளையும் ஆட்களை வைத்து செய்கிறேன். 
காய்களை தரம் பிரித்து தேங்காய் மண்டிக்கு நேரடியாக அனுப்புகிறேன். இதனால் புரோக்கர் கமிஷன், கழிவு காய்கள் வீண் என்ற பேச்சுக்கே இடமில்லை. வீணாகும் தேங்காய் மட்டைகளை தேங்காய் நார் தயாரிக்கும் மில்லிற்கு விற்கிறேன். இதன் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கிறது. தண்ணீர் வசதி இருப்பதால் தென்னை விவசாயத்தை லாபகரமாக செய்கிறேன். கழிவுக்காய்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிய அளவில் உள்ளது. லாபத்தில் தென்னை தோட்டங்களை வாங்கி வருகிறேன் என்றார்.
ஓய்வுக்கு பின்பும் முன்னோடி விவசாயி மகாலிங்கம் போல் ஓய்வறியாமல் உழைத்தால் 'உழுதவனுக்கு உலகமே சொந்தம்' என காலம் மலர்வது உறுதி. தொடர்புக்கு 94863 62785.
கா.சுப்பிரமணியன், மதுரை.


Source : Dinamalar

No comments:

Post a Comment