Tuesday, June 7, 2016

சிறுதானியங்கள் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி ஓடிவிடும்

ஒற்றை தலைவலி நீங்க சிறுதானியங்கள் சாப்பிடலாமென சித்த மருத்துவர் மகேந்திரன் ஆலோசனை வழங்கி உள்ளார். அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிகளவு ஊட்டசத்து இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, நியாசின், தயமின், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்களும், இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகின்றன. 

மேலும், சிறுதானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து  மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதனால், புற்றுநோயினை வெகுவாக குறைக்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு குறித்து பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரன் கூறியதாவது,  சிறுதானியங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. 

பெருங்குடலின் செயல்பாட்டைச் சீராக்குகின்றன. உடல்நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன. உடல் சுறுசுறுப்பிற்குக காரணமான செராட்டினின் உற்பத்திக்கு உதவுகின்றன. சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம், தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலியை தடுக்கிறது. சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்குவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பளிக்கின்றன. சிறுதானியங்களில் உள்ள நியாசின் (வைட்டமின் பி3) ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
 
அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு 2ம் வகை (இன்சுலின் சார்ந்த) சர்க்கரை நோய் வருவதில்லை. சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது. சிறுதானிய பயன்பாட்டினால் பெண்களுக்கு பித்தப்பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகின்றது. அதிக அளவு நார்ச்சத்து மிகுந்த சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கின்றன. உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது, உடல் எடை சீராகக் குறைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும், சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment