சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த நெல் பயிர் செய்யும் விவசாயிகள், பயிர் காப்பீட்டு திட்டத்தில் கட்டணம் செலுத்தி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளது:
புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போது, விவசாயிகளுக்கு ஏற்படும் பொருள் இழப்பினை ஈடு செய்வதற்காக தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் வறட்சிக்குள்ளான பகுதி என்பதால் விவசாயிகளுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நெல் காரிப் பயிருக்கான காப்பீடு செய்யலாம்.
இதில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், இதற்கான பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்திட வேண்டும். பயிர்க்கடன் பெறும் அனைத்து சிறிய, பெரிய விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் காப்பீட்டுக் கட்டணமாக நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.149, கடன் பெறாத சிறு மற்றும் மிகச்சிறு விவசாயிகள் காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ.134ம் செலுத்த வேண்டும். காப்பீட்டு கட்டணங்களை தங்கள் கிராம எல்கைக்குள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தலாம். மேலும், பயிர் காப்பீட்டு கட்டணம் செலுத்தும் போது தாங்கள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளமைக்கான ஆதாரங்களாக கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்று பெற்று, அதனை விண்ணப்பத்துடன் இணைத்து சம்மந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
நெல் காரிப் பயிருக்கான பயிர் காப்பீட்டுக் கட்டணத்தை, பயிர் விதைத்து ஒரு மாதம் அல்லது 15.12.2015க்குள் இதில் எது முன்னதோ அதற்குள் செலுத்த வேண்டும். காலக்கெடு தாண்டி வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இழப்பீட்டுத் தொகை என்பது நெல் பயிருக்கு மூன்று ஆண்டு சராசரி மகசூலினை அடிப்படையாகக் கொண்டு நடப்பு பருவத்தில் கிடைக்கும் மகசூலைக் கணக்கிட்டு வழங்கப்படும். குறிப்பிட்ட பகுதியில் காப்பீடு செய்யப்பட்ட பயிரின சராசரி மகசூலை விட நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகிதப்படி அப்பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு ஏற்பட்டதாகக் கருதி அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment