பழனியை அடுத்த மானூர், கோவிலம்மாபட்டியில் மண்மாதிரி, அசோல்லா உற்பத்தி குறித்து, மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் கிராமத் தங்கல் மற்றும் வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், பழனி சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர்.
பழனியை அடுத்த மானூரில் அசோல்லா உற்பத்தி குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போது, அசோல்லா பாசி வகையைச் சேர்ந்த மிதக்கும் பச்சைத் தாவரம். இது, பயிருக்கு உரமாகவும், பன்றி, கோழி, முயல் போன்ற கால்நடைகளுக்கு உணவாகவும் பயன்படுகிறது. இதில், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட ஏராளமான வைட்டமின்களும், வளர்ச்சி ஊக்கிகளும் உள்ளன.
இதை வளர்க்க 6 அடிக்கு 4 அடி அளவிலான பிளாஸ்டிக் அல்லது சிமெண்ட் தொட்டியில் கால் பங்குக்கு வண்டல் மண், செம்மண், தொழுஉரம் போன்ற செறிவூட்டப்பட்ட மண்ணை நிரப்பி, அதில் முக்கால் பங்குக்கு தண்ணீர் நிரப்ப வேண்டும்.
இதில், அசோல்லாவை வளர்க்கும்போது வாரத்துக்கு இரு முறை ஒரு கிலோ சாணம், நூறு கிராம் பாஸ்பரஸ் கலந்து ஊட்டமளித்தால், ஒரு நாளைக்கு ஒரு கிலோ அசோல்லா உற்பத்தியாகும் எனத் தெரிவித்தனர். இதில், 15-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
முன்னதாக, கோவிலம்மாபட்டியில் இம்மாணவர்கள் மண்மாதிரி எடுத்தல் மற்றும் அதன்மூலம் மண்ணின் அமைப்பு, வளம் அறிவது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அதில், விவசாயிகள் தாங்களாகவே மண்மாதிரி எடுத்து, ரூ. 20 செலவில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என விவரித்தனர்.
No comments:
Post a Comment