அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்
கம்பு, மிளகாய் விலை நிலவரம் குறித்த முன்னறிவிப்பை, வேளாண் விற்பனை தகவல் மற்றும்
வணிக ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து, வேளாண்மை துணை இயக்குநர் மு.சு.நா.
செல்வராஜ் தெரிவித்துள்ளது: வறட்சியைத் தாங்கி வளரும் தானியங்களில் கம்பு முக்கியப்
பயிராக உள்ளது. கடந்த 2013-14 ஆம் ஆண்டு தமிழகத்தில் 54,412 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட
கம்பு, 1.17 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது. தூத்துக்குடி, மதுரை, தேனி, திருவண்ணாமலை,
விருதுநகர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கம்பு அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
தற்போது, விழுப்புரம் சந்தையில் குவிண்டாலுக்கு ரூ.1550 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாக விழுப்புரம் சந்தையில் நிலவிய கம்பு விலையை ஆய்வு செய்ததில்,
2016 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் குவிண்டாலுக்கு ரூ.1500-1600 வரை இருக்கும் எனக்
கணிக்கப்பட்டுள்ளது.
மிளகாய் சாகுபடி: தேசிய அளவில் மிதமாகக் குறைந்துள்ள
மிளகாய் உற்பத்தி மற்றும் அதிகரித்துள்ள ஏற்றுமதியின் காரணமாக, நிகழாண்டில் மிளகாய்
விலை அதிகரித்துள்ளது. முண்டு மற்றும் சன்னம் ஆகியவை தமிழகத்தில் பயிரிடப்படும் முக்கிய
மிளகாய் வகைகள். குறிப்பாக, சன்ன ரகம் மொத்த உற்பத்தியில் 80 சதவீதமாக உள்ளது.
பருவமழை மாற்றத்தினால் மத்திய பிரதேசத்தில்
மிளகாய் உற்பத்தி குறைந்துள்ளது. நடப்பு பருவத்தில் எதிர்பார்க்கப்படும் மிதமான உற்பத்திக்
குறைவு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தையில் உள்ள தேவை போன்ற காரணங்களினால் மிளகாய்க்கு
நல்ல விலை கிடைக்கும். தற்போது, தூத்துக்குடி சந்தையில் சன்ன மிளகாய் வற்றல் கிலோ ரூ.120
வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 18 ஆண்டுகளாக தூத்துக்குடி சந்தையில் நிலவிய
சன்ன மிளகாய் விலையை ஆய்வு செய்ததில், 2016 பிப்ரவரி - மார்ச் மாதங்களில் சன்ன மிளகாய்
விலை கிலோவுக்கு ரூ.85-90 வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின்
அடிப்படையில், கம்பு மற்றும் மிளகாய் விதைப்பு முடிவுகளை விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம்
எனத் தெரிவித்துள்ளார்.
http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/10/27/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article3099532.ece
No comments:
Post a Comment