தருமபுரி மாவட்டம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் வீடுகள் தோறும் மரம் வளர்க்க வேண்டும் என ஆட்சியர் கே.விவேகானந்தன் வலியுறுத்தினார்.
காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், போதைமலைக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: போதைமலைக்காடு ஊராட்சியில் பெரும்பாலும் பழங்குடியினர் வசிக்கும் அனைத்து வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டி பயன்படுத்தியும், மகளிர் சுகாதார வளாகம், அங்கன்வாடி கழிப்பறைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது.
திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாகத் தேர்வு செய்வதற்கு அறிவிக்கக் கோரும் கருத்துருவை ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ளீர்கள். இது தொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்தின், பொன் விழா ஆண்டை நினைவு கூறும் வகையில், வீட்டிற்கு ஒரு மரக்கன்று நட்டு, வளர்க்க வேண்டும். அதன் ஒரு பகுதியாக இந்த ஊராட்சியில், 50 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் மற்றும் 1.1.2016 அன்று 18 வயது நிரம்பியவர்கள் குறிப்பாக இளம் வாக்காளர்கள் அக்.
4 மற்றும் 11-ஆம் தேதிகளில் அருகே உள்ள வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதைச் சரிபார்த்து, இல்லாத பட்சத்தில் அங்குள்ள அலுவலரிடம் விண்ணப்பித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
திட்ட இயக்குநர் தி.ஸ்ரீதர், செயற்பொறியாளர் அருள்செல்வி, உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், அன்பழகன் வட்டாட்சியர் மணி, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன், அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment