வன உயிரினங்கள் எதிர்காலத்திலும் நிலைத்திருக்க வேண்டுமெனில், 98 சதவீத மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் புவி அமைப்பு, பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 லட்சம் சதுர கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தியக் காடுகளில், 372 வகையான பாலூட்டி, 1,330 பறவை இனம், 399 வகை ஊர்வன, 181 வகையான நீர் மற்றும் நில வாழ்வன, 1,693 வகை மீன்கள், 60 ஆயிரம் வகை பூச்சி இனங்கள் உள்ளன. அரிய வகை விலங்குகள் வாழ்வதற்கான சூழல், அதிகபட்சமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியிலேயே அமைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த இரு நூற்றாண்டுகளாக பெருகிவரும் மக்கள் தொகையால், காடுகளும், பல அரிய வகை உயிரினங்களும் அழிந்து வருகின்றன.
அழிந்த வன உயிரினங்கள்: சிவிங்கிப் புலி, இருகொம்பு காண்டாமிருகம் உள்ளிட்ட பல விலங்குகள் முற்றிலும் அழிந்துவிட்டன. அந்த வரிசையில், இமயமலை பனிச் சிறுத்தை, இந்திய ஓநாய், வரிக்கழுதைப் புலி, காட்டு கழுதை, இரலைமாடு, பெரிய வரகுக்கோழி, பொன்கழுகு, செந்தலை வாத்து போன்ற உயிரினங்களின் வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டன.
கடந்த 100 ஆண்டுகளில் மட்டும், 36 வகையான பாலூட்டி வன விலங்குகளும், 300 வகை பறவை இனங்களும் அழிவைச் சந்தித்துள்ளதாக, இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்களை அதிகரிப்பதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. மூட நம்பிக்கை மற்றும் விற்பனை செய்வதற்காக வன விலங்குகள் அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. அடர்ந்த காடுகளுக்கும், வன விலங்குகளின் பெருக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும், மற்றொன்று இயல்பாகவே அழிந்துவிடும்.
இது சம்பந்தமாக, அனைத்துத் தரப்பினரும் விழிப்புணர்வு பெற்று காடுகளும், வன விலங்குகளும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்பதே, இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இது குறித்து, கொடைக்கானல் வன அலுவலர் து. வெங்கடேஷ் தெரிவித்தது: தமிழகத்தின் மொத்த வனப் பரப்பளவில் (22,877 ச.கி.மீ) சுமார் 6,708 ச.கி.மீ. வன உயிரினங்களுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வனக் கொள்கையின்படி, மொத்த காடுகளின் பரப்பளவில் 25 சதவீதப் பகுதி வன உயிரினங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, 29.32 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் 2 முதல் 8 ஆம் தேதி வரை, வன உயிரினப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், வன உயிரினங்களின் பெருக்கத்தின் முக்கியத்துவம் குறித்து 2 சதவீத மக்கள் மட்டுமே அறிந்துள்ளனர். அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்களின் பங்களிப்பு அவசியம். அதன்மூலமே, காடுகளை அழிவிலிருந்தும், உயிரினங்கள் கொல்லப்படுவதிலிருந்தும் தடுக்க முடியும் என்றார் அவர்.
தேசிய பூங்கா
வன விலங்குகளைப் பாதுகாக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 54 தேசிய பூங்கா (21 ஆயிரம் ச.கி.மீ.) மற்றும் 372 வன உயிரினச் சரணாலயம் (89 ஆயிரம் சகி.மீ.) உள்ளன. தமிழகத்தில் மட்டும் 5 தேசிய பூங்கா, தலா 14 வன உயிரினச் சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயங்கள் அமைந்துள்ளன.
No comments:
Post a Comment