Sunday, October 4, 2015

கலக்கல் ! : இயற்கை விவசாயத்தில் மண்டபம் பேரூராட்சி : உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது


ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி இயற்கை விவசாயம், உரம் என, மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
மண்டபத்தில் தினமும் 5 முதல் 10 டன் வரை குப்பை சேகர மாகிறது. இந்த குப்பையை அகற்ற 3 ஆண்டுகளுக்கு முன் "வளம் மீட்பு பூங்கா திட்டம்' செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ரூ. 30 லட்சத்தில் 4 ஏக்கரில் திடக்கழிவு மேலாண்மை, விவசாய நிலம் ஏற்படுத்தப் பட்டது. திடக்கழிவு மேலாண் மையில் மக்கும், மக்காத குப்பையை தனியாக பிரிக்கப் படுகிறது. மக்கும் குப்பையில் இயற்கை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை குறைந்த விலையில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
விவசாய நிலத்தில் தென்னை, வாழை, வெண்டை, பூசணி, புடலை, கொத்தவரை போன்ற காய்கறி பயிர்கள், துளசி, வல்லாரை, ஓம், ஆடாதோடா போன்ற மூலிகை செடிகளையும் வளர்க்கின்றனர். இவற்றிற்கு அங்கு தயாரிக்கப்படும் இயற்கை மற்றும் மண்புழு உரத்தை பயன் படுத்துகின்றனர். இதனால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் கிடைக்கும் காய்கறிகள் என்பதால் அவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். மேலும் மீதமுள்ள இயற்கை, மண்புழு உரத்தை விற்பனை செய்கின்றனர். இயற்கை உரத்தை கிலோ ரூ.5க்கும், மண்புழு உரத்தை ரூ.10க்கும் விற்கின்றனர். இயற்கை விவசாயம் மூலம் மண்டபம் பேரூராட்சி, மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது.
பேரூராட்சித் தலைவர் தங்கமரைக்காயர், செயல் அலுவலர் மாலதி கூறியதாவது: பிளாஸ்டிக் பொருள், தெருக்களில் குப்பை இல்லாத பேரூராட்சியாக மாற்றிட "வளம் மீட்பு பூங்கா திட்டம்' அமைத்தோம். தற்போது இயற்கை விவசாயம், உரம் போன்றவற்றின் மூலம் அப்பகுதியே சுற்றுசூழல் பூங்காவாக மாறி உள்ளது. உரங்களை குறைந்த விலைக்கே விற்கிறோம். காய்கறி மற்றும் உரம் மூலம் ஆண்டிற்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கிறது. இந்த பூங்காவை மற்ற உள்ளாட்சி அமைப்பினரும் பார்த்துவிட்ட செல்கின்றனர், என்றனர்.

No comments:

Post a Comment