அடுத்த 24 மணி நேரத்தில், புதுச்சேரி,
தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய
அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெப்பசலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில்
மழை பதிவாகி வருகிறது. மாநிலத்தில் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும்
பெய்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில்
பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம்
செஞ்சியில் 80 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதற்கு அடுத்தப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டம்
தளியில் 40 மி.மீ, திருவண்ணாமலை மாவட்டம் சாதனூர் அணை, தேன்கனிக்கோட்டை, தருமபுரி,
திண்டிவனம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் உள்ளிட்ட இடங்களில் 30 மி.மீட்டர்
மழை பதிவாகியது.
பலத்த மழைக்கு வாய்ப்பு:
புதுச்சேரி, தமிழகத்தின் வட
மாவட்டங்களில், திங்கள்கிழமை ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பசலனம் நீடிப்பதால், அடுத்து வரும் நாள்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு
சில இடங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை,
வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு
சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரியாக
இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment