புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழைக் காலங்களில் நேரிடும் இயற்கை இடர்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு 1077 என்னும் கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என்றார் ஆட்சியர் சு. கணேஷ்.
புதுகை பொது அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச பேரிடர் தவிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியைத் தொடக்கிவைத்து மேலும் பேசியது:
இயற்கைப் பேரழிவுகளான பூகம்பம், சுனாமி, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி போன்ற பேரிடர்களில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்.13 -ஆம் தேதி சர்வதேச பேரிடர் தவிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனடிப்படையில் தமிழக அரசு பொதுமக்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு பேரணிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது.
இப்பேரணியில் பங்கேற்பவர்கள் இயற்கை இடர்பாடுகள் உருவாகும் முறைகள், பேரழிவுகள் ஏற்படும்போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள், பிறரைப் பாதுகாக்கும் வழிமுறைகள் போன்ற பல்வேறு விழிப்புணர்வைப் பெற வேண்டும். நமது மாவட்டத்தில் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் குறித்து பல்வேறு அவசரத் தகவல்களை பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி 1077 - எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் இப்பேரணியின் மூலம் இயற்கை இடர்பாடுகள் குறித்து போதிய விழிப்புணர்வைப் பெற்று பேரழிவுக் காலங்களில் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
பொது அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தைச் சென்றடைந்தது. இதில், எம்எல்ஏ வி.ஆர். கார்த்திக்தொண்டமான், மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் ப. ஜோதிலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி, மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.சி. ராமையா, நகராட்சி ஆணையர் (பொ) ஜெ. சுப்பிரமணியன்,வட்டாட்சியர் ஜெயபாரதி, பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment