Wednesday, October 14, 2015

விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக ரூ.7.74 கோடி உதவி



கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக 3,868 விவசாயிகளுக்கு ரூ.7.74 கோடி மதிப்பில் உதவிகள் அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்தார்.
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் மானிய விலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தியுள்ள திட்டங்களை செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராஜாக்கமங்கலம், தோவாளை வட்டாரங்களில் வழங்கப்பட்ட கருவிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியது:
நிலம் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் சூரியசக்தி பயன்பாட்டை அறிமுகம் செய்து மோட்டார் பம்பு இயக்குதலும் நடைபெறுகிறது.
இதில், குறிப்பிடும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மண்வளப் பாதுகாப்பு பணிகளை செயல்படுத்த 245 விவசாயிகளுக்கு ரூ.4.22 கோடி மதிப்பில் கம்பி வலை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழைநீர் மற்றும் உபரி நீர் மேலாண்மைத் திட்டத்தின் மூலம் 45 விவசாயிகளுக்கு ரூ. 45 லட்சத்தில் 33 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேளாண்மையை இயந்திரமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத் திட்டத்தின் மூலம், 6 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்தில் பவர் டில்லர்கள், ஒரு டிராக்டர் வழங்கப்பட்டுள்ளது. நவீன இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 589 விவசாயிகளுக்கு ரூ.1.67 கோடி மதிப்பில் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
80 சதவீத மானியத்தில் சோலார் பம்பு செட்டுகள் ரூ.1.14 கோடி மதிப்பில் 33 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பொருள்களை உலர்த்தும் வகையில் ரூ.3.68 லட்சத்தில் 2 சூரிய உலர் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.13.55 லட்சத்தில் வேளாண் பொறியியல் துறைக்கு புதிய கட்டடமும் கட்டப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நிஜாமுதீன், செயற்பொறியாளர் அனந்தராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜான்கென்னடி, எட்வின், சுடலைமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  

No comments:

Post a Comment