Thursday, October 15, 2015

நெல் பயிருக்கு கூடுதல் யூரியா வேண்டாம்: வேளாண் துறை



நெல் பயிருக்கு கூடுதல் யூரியா அளிக்க வேண்டாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் .தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் தற்பொழுது நல்ல மழை பெய்து சம்பா பருவ நடவுப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே விவசாயிகள் யூரியா போன்ற தழைச்சத்து அளிக்கக்கூடிய உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவினை விட அதிக அளவில் பயன்படுத்தக் கூடாது. கூடுதல் அளவுக்கு யூரியா பயன்படுத்தினால், பயிர்களின் வளர்ச்சி அதிகரித்து பூச்சிநோய் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். இதனால் மகசூல் குறையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே விவசாயிகள் மண்வள பரிசோதனை அடிப்படையில் உரமிடுவது மிகவும் நல்லது. மேலும், யூரியாவுடன் மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும். விவசாயிகளிடையே குருணை வடிவான யூரியா உரத்தினை விட சிறிய அளவிலான யூரியா உரம் அதிக பயனைத் தரக்கூடியது என்ற தவறான எண்ணம் நிலவி வருகிறது. குருணை வடிவிலான யூரியா மற்றும் சிறிய அளவிலான யூரியா இரண்டிலும் தழைச்சத்து 46 சதவீதம் உள்ளது.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் தேவையான அளவு யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உரங்களைப் பெற்று பயன்பெறலாம்.
தனியார் விற்பனை நிலையங்களில் உரங்களை வாங்கும்போது ரசீதினை விவசாயிகள் தவறாமல் கேட்டுப்பெறவும். மேலும், மூட்டைகளிலுள்ள விற்பனை விலையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment