Thursday, October 15, 2015

உலக உணவு தினம்



“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி. அப்படி அழிக்கப்பட வேண்டிய நாள் மிக அருகில் வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.இன்றும் ஒருவேளை உணவுக்கு வகையின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம்.உயிர் வாழ உணவு அவசியம். அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. இது மனித உரிமையும் கூட. பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்.,16ம் தேதி, உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தொடக்கம்:

1945 அக்டோபர் 16 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நாளை நினைவு கூறும் வகையில் நாம் உயிர் வாழ அத்தியாவசியமான உணவைச் சிறப்பிக்கும் பொருட்டு நவம்பர் 1979 ஆம் ஆண்டில்  20வது பொது மாநாட்டில் ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்து, உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும்  உலக நாடுகள் அனைத்தாலும் கொண்டாடப்படுகிறது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முயற்சியினால் இத்தீர்மானம் ஏற்கப்பட்டு தற்போது 192ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.



இந்தியாவில் உணவு நிலை:

முக்கியமாக இந்தியா உணவுப் பாதுகாப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வின்படி, உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டோர் தரப்பட்டியலில் இந்தியா அச்சுறுத்தலான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

ஊட்டச்சத்து குறைபாட்டால் மகாராஷ்டிர மாநிலத்தின் 3 மாவட்டங்களில் கடந்த 11 மாதங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் காரணமாக 1,274 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நந்தர்பர் மாவட்டத்தில் 662, பால்காரில் 418, தானேயில் 194 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக உயிரிழந்துள்ளனர். தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் சராசரி எடைக்கும் கீழ் உள்ள குழ்ந்தைகளின் எண்ணிக்கை 2013-ம் ஆண்டு 286-ஆக இருந்த்து. 2014-ல் இது 497-ஆக அதிகரித்தது.  பழங்குடியினர் பகுதிகளிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு விவகாரம் அதிகரித்து கொண்டே வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 19 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் வேளாண் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், உலக நாடுகளில் மற்ற எந்த நாட்டை காட்டிலும் இந்தியாவில் அதிகப்படியாக 19 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கடந்த 1990 ஆண்டுகளில் 79 கோடியாக இருந்த ஊட்டச்சத்து குறைபாடு அளவு தற்போது, 21 கோடியாக குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் இதன் அளவு ஒன்றரை கோடி மட்டுமே குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 15 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐநா கூறியுள்ளது.
உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது.

சர்வதேச விருது:

உலகளவில் அதிக உணவு உற்பத்திக்கு காரணமானவர்களை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும் சர்வதேச உணவு விருது, 1986 முதல் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு வென்ற, நார்மன் போர்லாக் என்ற அமெரிக்கரின் முயற்சியால் இவ்விருது உருவாக்கப்பட்டது. இவ்விருது பெறுபவருக்கு 13 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவின் சார்பில் இதுவரை எம்.எஸ்.சுவாமிநாதன், வர்கீஸ் குரியன் உள்ளிட்ட ஆறு பேர் இவ்விருதை பெற்றுள்ளனர்.

அதிகபட்ச விவசாயி தற்கொலையை எதிர் கொண்டு வரும் நாம் இன்றும் நமக்கு கிடைத்த உணவை வீண் அடிக்கிறோம். அன்று முதல் இன்று வரை நமது நாட்டு மக்கள் விவசாயிகளும் அவர்கள் படும் கஷ்டத்தையும் எண்ணி பார்ப்பதில்லை. இனியாவது நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய விவசாயிகளை மதித்து அவர்களால் கிடைக்கக்கூடிய உணவை வீணாக்காமல் அவர்களுக்கு நன்றி செலுத்துவோம்.



No comments:

Post a Comment