Thursday, October 15, 2015

மத்திய அரசு திட்டத்தின் கீழ் மானாவாரி விவசாயிகளுக்கு இலவச ஆடு, கறவை மாடுகள் அதிகாரி தகவல்



திண்டுக்கல்

மத்திய அரசு திட்டத்தின் கீழ் 100 மானாவாரி விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளதாக வேளாண் அதிகாரி தெரிவித்தார்.

மானாவாரி விவசாயம்

தமிழகத்தில் ஏராளமான மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வடகிழக்கு பருவமழை காலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்ற பயறுவகைகள் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மானாவாரி நிலங்களை மட்டும் நம்பி ஏராளமான விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் 3 மாதம் மட்டுமே வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் கிடைக்கிறது.

மீதமுள்ள 9 மாதங்கள் வேலை இல்லாததால் அவர்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கவும், மானாவாரி விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும் வகையில் மத்திய அரசு தேசிய நீடித்த, நிலையான வேளாண்மை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குனர்(மத்திய திட்டம்) தவமுனி கூறியதாவது:-

இலவச ஆடு, கறவை மாடுகள்

மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள தேசிய நீடித்த, நிலையான வேளாண்மை திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட இ.சித்தூர், அம்மாபட்டி, நாகையகோட்டை ஆகிய 3 கிராமங்களில் 100 மானாவாரி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 100 ஹெக்டேர் மானாவாரி நிலங்களை தொகுத்து பயறு வகை செயல்விளக்க திடல் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 100 விவசாயிகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பயறு வகைகள் மற்றும் நிலக்கடலை சாகுபடி செய்வதற்கான இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.
 

மேலும் இந்த விவசாயிகளில் 50 பேருக்கு ரூ.13 ஆயிரத்து 500 மதிப்பில் தலா 10 ஆடுகளும்(9 பெட்டை, 1 கிடா), 50 பேருக்கு தலா ரூ.17 ஆயிரத்து 500 மதிப்பில் ஒரு கறவை மாடும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஆடு, கறவை மாடுகள் வழங்கப்பட உள்ள 100 விவசாயிகளுக்கும், திட்டம் தொடர்பான அறிமுக கூட்டம் நாகையகோட்டையில் நடத்தப்பட்டது.
 

இவ்வாறு அவர் கூறினார்.
 

No comments:

Post a Comment