Tuesday, October 13, 2015

நெல்நாற்று நடவுக்கு இயந்திரம் பயன்படுத்தினால் உடனடி மானியம் வேளாண்துறை அறிவிப்பு


மானாமதுரை,: இயந்திரம் மூலம் நெல்நாற்று நடவு செய்யும் விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ. 3 ஆயிரம் மானியம் உடனடியாக வழங்கப்படுமென வேளாண்துறையினர் அறிவித்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத்துவங்கியிருப்பதால் விளைநிலங்களில் நெல்நாற்றுகளை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட கால்பிரவு, தெற்குசந்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம்(அரிசி) 2015-16 ன் கீழ் இயந்திரம் மூலம் வரிசை நாற்று நடவுப்பணிகள் நடந்து வருகின்றன.


இப்பணிகளை பார்வையிட்ட வேளாண்துறை துணை இயக்குநர் அழகப்பன், உதவி இயக்குநர் மூர்த்தி கூறியதாவது: இயந்திரம் மூலம் வரிசை நடவு செய்தால் விதை அளவு குறையும். பயிர் எண்ணிக்கை சரியான விகிதத்தில் பராமரிக்கப்படும். போதுமான இடைவெளி கிடைப்பதால் களை எடுப்பதும், உரமிடுவதும் சுலபமாகும். இத்திட்டத்தின்கீழ் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். இப்பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். ஒவ்வொரு விவசாயியும் அதிகபட்சமாக 2 எக்டேருக்கு மானிய உதவி பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர். வேளாண்மை அலுவலர்கள் செல்லத்துரை, மலர்விழி, வேளாண்மை உதவி அலுவலர்கள் மகாலிங்கம், பாண்டியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=498433&cat=504

No comments:

Post a Comment