Wednesday, October 14, 2015

தமிழக மீனவ பெண்ணுக்கு அமெரிக்க விருது



சென்னை:கடல் வள பாதுகாப்புக்காக, அமெரிக்க நாட்டின், 'சீகாலஜி' விருது, தமிழக மீனவப் பெண் லட்சுமி மூர்த்திக்கு கிடைத்துள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகேயுள்ள சின்னப் பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி மூர்த்தி, 45. மன்னார் வளைகுடா, தேசிய கடல் பூங்கா அருகில், கடல்பாசி அறுவடை செய்யும் தொழில் செய்கிறார்; ராமநாதபுரம் மீன்பிடி தொழிலாளர் சங்க நிர்வாகியாகவும் இருக்கிறார். கடல் மற்றும் கடற்கரை சுற்றுச் சூழலை பாதுகாக்க, இவர் தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இதற்காக, அமெரிக்க நாட்டின், 'சீகாலஜி' என்ற 
கடல் வள பாதுகாப்பு ஆய்வு அமைப்பின், 'சிறந்த மகளிர் விருது' லட்சுமி மூர்த்திக்கு வழங்கப்பட்டுள்ளது.கடல் வள பாதுகாப்பு முயற்சியில், உலகம் முழுவதும் ஈடுபட்டுள்ள தனி நபர்களின் தகவல்களை சேகரித்த இந்த அமைப்பு, சர்வதேச அளவில், லட்சுமி மூர்த்தியை தேர்வு செய்துள்ளது.இந்த விருது வழங்கும் விழா, அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த 8ம் தேதி நடந்தது. 'சீகாலஜி' அமைப்பின் நிறுவனர் பால் ஆலன் காக்சிடமிருந்து, லட்சுமி மூர்த்தி விருதை பெற்றுக் கொண்டார். விருதுடன், 65 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது. நேற்று, சென்னை திரும்பிய அவரை, தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ உள்ளிட்ட, மீனவ சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.விருது பெற்ற லட்சுமி மூர்த்தி கூறுகையில், ''கடல் வளம், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ஆண்டுக்கு, இரண்டு மாத விடுப்பு விட்டும்; ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கடல் பாசி எடுக்கிறோம். எனக்கு கிடைத்த இந்த அமெரிக்க விருது, தமிழக மீனவப் பெண்களுக்கு கிடைத்த உலக அங்கீகாரம்; மிகுந்த 
மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.



No comments:

Post a Comment