கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சம்பா போக சாகுபடியில் உற்பத்தி செலவை குறைக்க விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா போக சாகுபடி செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் சம்பா நடவு பணி நடந்து வருகின்றது. இந்த ஆண்டு கடும் வெயில், தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றால் விவசாயிகள் நெல் நாற்று விடுவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
இதனால் ஏற்பட்ட தாமதத்தை ஈடு செய்வதற்காக தற்போது குமராட்சி, காட்டுமன்னார்கோவில், புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெல் அறுவடை இயந்திரம் நடைமுறைக்கு வந்த பின்னர் தான், நெல் மகசூலில், விவசாயிகளுக்கு ஓரளவு லாபமான பயிராக உள்ளது. மேலும் இதன் உற்பத்தி செலவை குறைப்பதற்காக அரசு ஒற்றை நாற்று நடவு, இயந்திர நடவு செய்வதை ஊக்குவித்து வருகிறது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு அரிசி வரத்து அதிகரிப்பதால் நெல் விலை குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல்லில் உற்பத்தி செலவை குறைக்க விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர். நாற்று விட்டு நடவு செய்வதை விட நேரடி நெல் விதைப்பு செய்வதால் நாற்று பிடுங்கும் கூலி, நடவு செலவு என ஏக்கர் ஒன்றுக்கு 3,000 ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.
நேரடி நெல் விதைப்பு செய்வதால் களை சற்று கூடுதலாக வளரும். அதை கட்டுப்படுத்த பல தரமான களைக்கொல்லி மருந்துகள் மார்க்கெட்டில் வந்துவிட்டன.
அதைக்கொண்டு கட்டுப்படுத்திவிட்டால் நடவு செய்யும் வயல்களை விட 10 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகி விடும். இதனால் பல பகுதிகளில் இயந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். http://www.dinamalar.com/district_detail.asp?id=1357746
No comments:
Post a Comment