Monday, October 5, 2015

சுற்றுலா பயணிகளை கவரும் ராமநாதபுரம் ஐந்திணை பூங்கா



ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. அங்கு சினிமா 'சூட்டிங்' எடுக்கவும் அனுமதித்துள்ளனர்.தமிழகத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில், நிலங்களின் சிறப்புக்கு ஏற்ப ஐந்திணை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் பூங்கா தஞ்சையிலும், பாலை பூங்கா ராமநாதபுரம் அச்சடிபிரம்பிலும் அமைக்கப்பட்டது.
இதில் உவர்ப்பு மண் காரணமாக அச்சடிபிரம்பில் பாலை பூங்கா அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த பூங்காவை தவிர மற்றவை 5 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டன. அதன்பின் அச்சடிபிரம்பில் மண்ணின் தன்மையை மாற்றி, செடிகள் வளர்க்கப்பட்டு ஐந்திணை பூங்காவாக அமைக்கப்பட்டது. இந்த பூங்கா ஜூன் 16ல் திறக்கப்பட்டது. இப்பூங்கா ரூ.7.40 கோடி செலவில் 10 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு பாலைக்கே உரிய பனை மரக்குடில்கள் ஏராளமாக உள்ளன. 
ஊதா கலரில் பூக்கும் காட்டுரோஜா, பைஜஸ்பெஞ்சமினா, கிளியோடென்ட்ரான், கூந்தல் பனை, கற்றாழை, மணல் மேடுகள், யானை போன்ற காட்டு விலங்குகளின் சிலைகள் உள்ளன. இந்த பூங்கா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் திருச்செந்துார், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
தோட்டக்கலை அலுவலர் அழகேஸ்வரன் கூறியதாவது: பூங்கா தினமும் காலை 8:30 முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். பூங்காவின் நீர் தேவைக்காக தற்போது ரூ.10 லட்சத்தில் 2 குளங்கள் வெட்டியுள்ளோம். வெளிநாட்டுப் பூக்களை வளர்க்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சினிமா 'சூட்டிங்' எடுக்கவும் அனுமதித்துள்ளோம், என்றார்.


No comments:

Post a Comment