ஆண்டிப்பட்டி,
வைகை அணை பூங்கா பகுதியில் ரூ.27 லட்சம் செலவில் புதிதாக வண்ண மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள வண்ண மீன்களை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டனர்.
வண்ணமீன் அருங்காட்சியகம்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. வைகை அணையின் முன்பாக அமைந்துள்ள பூங்கா பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு ஒவ்வொரு விடுமுறை நாட்களின் போதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் வைகை அணை பூங்காவை மேம்படுத்த சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி படகுகுழாம், செயற்கை நீரூற்று, புல்வெளிகள், வண்ணவிளக்குகள் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் வைகை அணை வலது கரை பூங்கா பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ணமீன்கள் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
ரூ.27 லட்சம்
இதுகுறித்து வைகை அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:–
வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறோம். அதில் தற்போது வண்ணமீன்கள் அருங்காட்சியகம் ரூ.27 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 11 பெரிய தொட்டிகளில் 11 வகையான வண்ணமீன்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மீன்கள் ஒவ்வொன்றும் புதுமையாகவும், அழகாகவும் இருப்பதால், இது சுற்றுலா பயணிகளை கவரும். அருங்காட்சியகத்தை பார்வையிட தனியாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. விடுமுறை நாட்களிலும், சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நாட்களிலும் இந்த வண்ணமீன்கள் அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்காக திறந்து விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment