Tuesday, October 6, 2015

தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.22 கோடியில் மானியத் திட்டங்கள்: ஆட்சியர்


தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.22 கோடியில் மானியம் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ..ஹரிஹரன் தெரிவித்தார்.
 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில்  செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் ..ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். வேடசந்தூர் வட்டம், பாடியூர் மற்றும் தொட்டணம்பட்டி  ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் திட்டத்தினை ஆய்வு செய்த பின் அவர் தெரிவித்தது:
 திண்டுக்கல் மாவட்டத்தில், பழம் மற்றும் காய்கறி பயிர்கள், மலைத்தோட்ட பயிர்கள், மருத்துவ பயிர்கள், மலர் சாகுபடி என சுமார் 69,736 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
 ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 40 முதல் 50 சதவீதம் வரை மானியம் வழங்கி, பயிர் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பசுமைக்குடில் சாகுபடி, இயற்கை விவசாயம், பயிர் பாதுகாப்பு கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் ரூ.4.18 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளன.
 மேலும், புதிதாக 1120 ஹெக்டேர் பரப்பில் மா, கொய்யா, திராட்சை, எலுமிச்சை, கோகோ, மலர்கள், வெங்காயம், மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட உள்ளது. அதேபோல், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க முன்வரும் விவசாயிகளுக்கு, அதிக இடைவெளி பயிர்களுக்கு ரூ.2.21 கோடி, குறைவான இடைவெளி பயிர்களுக்கு ரூ.5.76 கோடி என மொத்தம் ரூ.7.98 கோடிக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 புறநகர் எல்லை காய்கறி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.2.46 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய மருத்துவ இயக்கத் திட்டத்தின் கீழ், ரூ.41.59 லட்சம் மதிப்பீட்டில் 50 ஹெக்டேரில் கண்வலிக்கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது.
 அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அரசுத் தரப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்களை அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
 ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வீ.ரெ.வீரபத்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராமநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .சாலிதளபதி ஆகியோர் உடனிருந்தனர்.


http://www.dinamani.com/edition_madurai/dindigul/2015/10/07/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-/article3066625.ece

No comments:

Post a Comment