Monday, October 12, 2015

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல்


பொள்ளாச்சி
சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சகாப்தீன் தெரிவித்துள்ளார்.
அட்மா திட்ட கூட்டம்
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) கூட்டம் மீன்கரை ரோட்டில் உள்ள உழவர் மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அட்மா திட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் செல்வி பத்மினி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் உமாராணி பேசும் போது கூறியதாவது:–
வேளாண்மை துறை மூலம் வழங்கும் மானியங்களில் இந்த ஆண்டு முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளன. இதேபோன்று டி..பி. உரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெறப்பட்ட ரசீது சமர்பித்து மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு மானியம்
பசுந்தாள் பயிர்களான சணைப்பை, தக்கப்பூண்டு, கொளுஞ்சி போன்றவற்றை விதை உரிமம் பெற்ற கடைகளில் வாங்கி ரசீதுடன் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் பயறு வகை பயிர்களுக்கு டி..பி. உரம் மற்றும் தெளிப்பு கூலிக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகின்றன.
மண்ணில் அங்கக சத்தை அதிகரிக்க பசுந்தாள் உர பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ விதை வீதம் 2 ஹெக்டேர் வரை வழங்கப்படுகின்றன. உரிமம் பெற்ற விதைக்கடைகளில் பெறப்பட்ட பில்லுடன் மானியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். கருவி மூலம் நிலக்கடலை சாகுபடி செய்ய ஒரு ஹெக்டேருக்கு ரூ.2020 மதிப்பிற்கு நுண்ணூட்டம், ஜிப்சம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மானியமாக வழங்கப்படுகின்றன. வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள முன்னுரிமை பதிவேட்டில் விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயற்கை விவசாயம்
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சகாப்தீன் பேசும் போது கூறியதாவது:–
தேசிய தோட்டக்கலைத்துறை சார்பில் பவர் டில்லர் எந்திரம் வாங்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. தென்னை, வாழை, காய்கறி பயிர்கள், மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க வடக்கு ஒன்றியத்திற்கு 30 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. தொழு உரம், மண்புழு உரம், உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை
தொடர்ந்து விவசாயிகள் பேசும் போது, பொள்ளாச்சிஉடுமலை ரோட்டில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை மீன்கரை ரோட்டில் உள்ள உழவர் மையத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதில் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சண்முக பிரியா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உமா ஷாலினி, நாகராஜ், பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் நெல்லை முருகன், வேளாண்மை பொறியியல் துறை இளநிலை பொறியாளர் சூரியகுமார், பொள்ளாச்சி கனரா வங்கி வேளாண்மை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.


http://www.dailythanthi.com/News/Districts/Coimbatore/2015/10/12011555/Drip-irrigation-help-farmers-set-up100-percent-of.vpf

No comments:

Post a Comment