Monday, June 6, 2016

விவசாயிகளுக்கான 'கிசான் சுவிதா' மொபைல் 'ஆப்ஸ்' அறிமுகம்

திண்டுக்கல்: 'கிசான் சுவிதா' எனும் புதிய மொபைல் ஆப்ஸ் விவசாயிகளுக்கு ஆலோசனை தகவல்களை வழங்க என தனியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த 'ஆப்ஸ்' விவசாயிகளுக்கு உதவும் வகையில் வடிவமைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மண் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் மற்றும் பருவநிலைகள், நோய் எச்சரிக்கை, சந்தை விலைகள், விநியோகம், பயிர் உற்பத்தி, டீலர்கள் குறித்த தகவல்கள் மற்றும் அத்துடன் நிபுணர்களின் ஆலோசனைகள், முக்கிய தகவல்களை வழங்குகிறது.
மேலும், இதில் உள்ளூர் நிர்வாகம் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடுகிறது அது எப்போது நிலத்துக்கு வரும் என்கிற தகவல்களையும் பெறலாம் என்பது தனி சிறப்பு.
இந்த ஆப்ஸை பெற, 'பிளே ஸ்டோரில்' நுழைந்து 'கிசான் சுவிதா' எனும் மொபைல் 'ஆப்ஸ்'சினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். அதில் விவசாயி தன்னுடைய பெயர், போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ததும் அந்த ஆப்ஸில் விவசாயின் பெயர் தெரியும்.
இதில் நிலம், மண் வகை, வானிலை மற்றும் பயிர்களின் வகைகள் உள்ளிட்ட தகவல்கள் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக உள்ளூர் மொழியில் அனுப்பப்படும். இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு எழும் சந்தேகங்களையும் தெரிவித்து பதில் பெறலாம். இத்தனை வசதி இருந்தாலும் இதில் சில கவலைக்குரிய விஷயங்களும் உள்ளன.
'ஸ்மார்ட் போனில்' மட்டுமே இந்த ஆப்ஸ் இயங்கும். அடுத்து இந்த ஆப்ஸ்சில் <உள்ள தகவல்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதால் தமிழ் மட்டுமே தெரிந்த விவசாயிகளுக்கு எந்தளவு பயனுள்ளதாக அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில்,
'ஸ்மார்ட் போனில் மட்டுமே இந்த செயலி இயங்கும் என்றாலும், இந்த ஆப்ஸ் பயனுள்ள பல தகவல்களை கொண்டுள்ளது. ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை கொண்டு சேர்க்கலாம்',என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment