Monday, June 6, 2016

அனைத்து பயிர்களிலும் அதிக மகசூல் பெற சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி வழிகாட்டல்

நாம் பயிரிடும் அனைத்து வகை பயிர்களிலும் அதிக மகசூல் பெற சாகுபடிக்கு முன்  மண் பரிசோதனை செய்வது அவசியம் என வேளாண் அதிகாரி அறிவுறுத்தியிருக்கிறார். இது குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சாந்தி  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 
மண்ணில் உள்ள பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவை கணக்கிட்டு சமச்சீர் முறையில் உரமிடுவதற்கும், சிக்கன முறையில் உரமிட்டு உரச் செலவை குறைத்திடுவதற்கும், அதற்கேற்ப கண்மாய் வண்டல் அல்லது மணலிட்டு மண் நயத்தை மேம்படுத்துவதற்கும், மண் தரம் அறிந்து நுண்ணூட்ட உரமிடுவதற்கும், மண் ஆய்வு செய்வது அவசியமாகும். பயிர் சாகுபடி செய்வதற்கு முன்பு மண் ஆய்வு செய்திட வேண்டும். முக்கியமாக கோடை காலங்களில் பயிர் இல்லாத தருணத்தில் செய்வது சாலச்சிறந்தது.

மண் மாதிரிக்கு எரு குவிக்கப்பட்ட இடம், வரப்பு ஓரம், நடைபாதை, வயல் ஓரம், வாமடைப்பகுதி மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் மண் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது ஒரு வயலில் 10 இடங்களில் மண் மாதிரி எடுக்க வேண்டும். எடுக்கும் இடங்களில் இருக்கும் இலை, தழைகளை எடுத்துவிட வேண்டும் மேல் மண்ணை அப்புறபடுத்தக் கூடாது. 22.5 செ.மீ (3/4 அடி) ஆழம் வரை ‘ஸ்’வடிவத்தில் குழி வெட்ட வேண்டும். 

குழியில் இரு ஓரங்களிலும் 2.5 செ.மீ(1 அங்குலம்) கனத்திற்கு மேலிருந்து கீழாக சுரண்டி வழித்து மண்ணை சேகரிக்க வேண்டும். இதற்கு அலுமினிய கரண்டி அல்லது மூங்கில் குச்சிகளை பயன்படுத்துவது நல்லது. சேகரித்த மண்ணை சுத்தமான சாக்கு அல்லது பிளாஸ்டிக்தாள் அல்லது சுத்தமான சிமெண்ட் தரையில் கொட்டி பெரிய கற்கள், வேர்கள் முதலியவற்றை நீக்கி விட்டு நன்கு கலக்கி பரப்ப வேண்டும். பரப்பிய மண்ணை நான்கு சம பாகங்களாக பிரிக்க வேண்டும். எதிர் எதிர் பாகங்களை நீக்கி விட்டு மீதம் உள்ள இரண்டு பாகங்களை ஒன்று சேர்த்து கலக்கி மறுபடியும் நான்கு பாகங்களாக பிரிக்க வேண்டும். முதல் தடவை நீக்கபட்ட பாகங்களை விட்டுவிட்டு மற்ற எதிர்பாகங்களை நீக்க வேண்டும். மீதம் உள்ள இரண்டு பாகங்களையும் ஒன்று சேர்த்து ஏற்கனவே செய்தது மாதிரி அரைக்கிலோ மண் இருக்கும் வரை செய்ய வேண்டும்.

 இதற்கு நான்கு “சமபாக முறை” அல்லது “கால் பங்கீட்டு முறை” என்று பெயர். நெல், சோளம், கம்பு, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு 15 செ.மீ ஆழத்திலும், மிளகாய், பருத்தி, கரும்பு, வாழை, காய்கறிகள், மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கும், தென்னை மற்றும் மரப்பயிர்களுக்கும் 90 செ.மீ ஆழத்திலும், பழ மரங்களுக்கு 150-180 செ.மீ ஆழம் வரையிலும் புல் வகை பயிர்களுக்கு 10 செ.மீ ஆழத்திலும் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். களர், உவர் நிலங்களுக்கு தனித் தனியாக மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். மண் மாதிரியுடன் உழவரின் பெயர், கிராமம் மற்றும் முகவரி, சர்வே எண், முன்னர் பயிரிடப்பட்ட பயிரின் பெயர், அடுத்து பயிரிடப்போகும் பயிரின் பெயர் ஆகிய விபரங்கள் அடங்கிய மண் மாதிரி விபரத்தாளையும், மண் பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment