Tuesday, June 7, 2016

உடலுக்கு குளிர்ச்சி தரும் அகத்திக்கீரை

Preventing diseases caused by summer

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்ப்போம். உடல் உஷ்ணம் அதிகமானால் வாய் புண், கண் எரிச்சல், தூக்கமின்மை ஏற்படும். இப்பிரச்னைகளை தடுக்க மணத்தக்காளி சூப் தயாரிக்கலாம்.தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு, மஞ்சள் பொடி, சமையல் எண்ணெய், உப்பு. அரிசியை ஊறவைத்து அதன் தண்ணீரை மட்டும் எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விடவும். 

எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, வரமிளகாய், சின்னவெங்காயம் போடவும். மணத்தக்காளி கீரை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், அரிசி நீரை விட்டு கொதிக்க வைக்கவும். சிறிது மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்த பசையை சேர்க்கவும். இந்த சூப்பை குடித்துவர தலைவலி, கண் எரிச்சல், பித்தம் போன்றவை சரியாகும். மணத்தக்காளி உஷ்ணத்தை குறைக்கிறது.கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணத்தால் உடலின் வெப்பம் கூடுகிறது. 

இதனால் கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். பித்தம் அதிகம் உற்பத்தியாவதால் கோடைகாலத்தில் மஞ்சள் காமாலை வர அதிக வாய்ப்புள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும் கிர்ணி பழம் ஜூஸ் தயாரிக்கலாம். கிர்ணி பழம் இந்த சீசனில் எளிதாக கிடைக்கும். கிர்ணி பழத்துடன் குளிர்ந்த பால், சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் கிர்ணி. இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். 

அகத்தி கீரையை பயன்படுத்தி உடல் வெப்பத்தை குறைக்கும் உணவு தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, சின்ன வெங்காயம், வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கலந்த பசை, மஞ்சள் பொடி, அரிசி ஊறவைத்த தண்ணீர், சமையல் எண்ணெய், உப்பு.ஒரு பாத்திரத்தில் அரிசி நீரை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிது மஞ்சள் பொடி, அகத்தி கீரை சேர்க்கவும். கொதித்தபின் சமையல் எண்ணெய்யை ஊற்றவும். இதனுடன் வெங்காயம் மற்றும் சீரகம் சேர்ந்த பசை உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெய்யுடன், சின்ன வெங்காயம், கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து, அகத்தி ரசத்தை தாளிக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். அகத்தி கீரை உடலுக்கு நன்மை தரக்கூடியது. இதை அடிக்கடி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையும். ஈரல் பலம் பெறும். உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரி சாலட் தயாரிக்கலாம். வெள்ளரி பிஞ்சுடன் சுவைக்காக சிறிது உப்பு, புளிப்பில்லாத தயிர் சேர்த்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது கோடைகால நோய்கள் நம்மை தாக்காது.

Source : Dinakaran

No comments:

Post a Comment