Tuesday, June 7, 2016

குறுவை சாகுபடி திட்டத்தை செயல்படுத்த ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு வேளாண்மைத்துறை ஆணையர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி திட்டத்தை செயல்படுத்த ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மைத்துறை ஆணையர் கூறினார்.

ஆய்வுக்கூட்டம்

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களுக்கு செயல்படுத்தப்படுகின்ற குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் சுப்பையன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஜெயசுந்தர், தஞ்சை, அரியலூர் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், கூட்டுறவு இணைப்பதிவாளர்கள், வேளாண்மைத்துறை துணைஇயக்குனர்கள், செயற்பொறியாளர்கள், மின்வாரிய செயற்பொறியாளர், வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும்¢ அனைத்து வட்டார வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

ஆணையர் பேச்சு

கூட்டத்தில் வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திரன் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை செயல்படுத்திட ரூ.19 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி திட்டத்தில் விலையில்லா எந்திர நடவு செய்ய 40 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.16 கோடி பெறப்பட்டுள்ளது. இதுவரை 413 ஏக்கர் பரப்பில் எந்திரம் மூலம் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மீதமுள்ள பரப்பு ஜூலை 2 அல்லது 3-வது வாரத்தில் முடிவடையும்.

நுண்ணூட்ட உரக்கலவை 12 ஆயிரம் ஏக்கருக்கு 60 டன் வினியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. துத்தநாக சல்பேட் 30 ஆயிரம் ஏக்கருக்கு 300 டன் வினியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசன நீரை சிக்கனமாக உபயோகப்படுத்த தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 250 யூனிட்டுகள் வினியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவிரி பாசன விவசாயிகள் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் பொருட்டு ஏக்கருக்கு ரூ.1400 என்ற அளவில் 8ஆயிரம் ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்டத்தில் விலையில்லா நடவு எந்திரம் மூலம் நடவு செய்திட ஆயிரம் ஏக்கருக்கு ரூ. 40 லட்சம் பெறப்பட்டுள்ளது. நுண்ணூட்ட உரக்கலவை 1500 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரமும், துத்தநாக சத்து பற்றாக்குறையை நீக்கிட சிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கு ரூ.10 லட்சமும் பெறப்பட்டுள்ளது. பாசன நீரை சிக்கனமாக உபயோகப்படுத்த தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 50 யூனிட் வினியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்டத்தில் நடவு எந்திரம் மூலம் நடவு செய்ய 1500 ஏக்கர் பரப்பிற்கு ரூ.60 லட்சமும், நுண்ணூட்ட உரக்கலவை வினியோகம் செய்வதற்கு 1500 ஏக்கருக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரமும், சிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோ அளவில் 4 ஆயிரம் ஏக்கருக்கு ரூ.16 லட்சமும் பெறப்பட்டுள்ளது. பாசன நீரை சிக்கனமாக உபயோகப்படுத்த தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் 50 யூனிட் வினியோகம் செய்திட ரூ.10 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி திட்டத்தினை செயல்படுத்திட ரூ.88 லட்சத்து 50 ஆயிரம் பெறப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் குறுவை சாகுபடி செய்யும் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை ஆணையர் ராஜேந்திரன் இலவச நுண்ணூட்ட உரக்கலவையை வழங்கினார்.

அதேபோல திருவையாறை அடுத்த வில்லியநல்லூரில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தின் மூலம் எந்திர நடவு முறையினை வேளாண்மைத்துறை ஆணையர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஜெயசுந்தர், இணை ஆணையர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Source : Dailythanthi

No comments:

Post a Comment