Thursday, October 1, 2015

சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு


திருச்சி: சம்பா நெற்பயிர்களுக்கு இயற்கை சீற்றங்களாலும், பூச்சி நோய்களால் ஏற்படும் மகசூழ் இழப்பினை ஈடுகட்ட, தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருச்சி மாவட்ட கலெக்டர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளாலும், பூச்சி நோய் தாக்குதலாலும், பயிர்களின் மகசூல் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க, தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டம் உருவாக்கப்பட்டு, செயல் படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் சேவை வங்கிகள் மூலம் பயிர்கடன் பெற்றுள்ள விவசாயிகள், இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். கடன் பெறாத விவசாயிகளும், இத்திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். சம்பா நெல் சாகுபடியில் பயிர் பாதிப்பு ஏற்படும் போது, உத்தரவாத மகசூலில் இருந்து, நடப்பு பயிரின் மகசூல் எவ்வளவு குறைந்துள்ளதோ, அதே விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும். உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று ஆண்டு மகசூல் சராசரியாக எடுத்துக்கொள்ளப்படும். வட்டார அளவில் காப்பீடு செய்யப்பட்ட பயிரின் மகசூல், உத்தரவாத பயிரின் மகசூலை விட குறைவாக இருந்தால், அந்தப் பயிரை காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், மகசூல் குறைவு விகிதப்படி இழப்பீடு வழங்கப்படும். பயிர் காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகையில் கடன்பெறாத சிறு, குறு விவசாயிக்கு, 55 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 50 சதவீத மானியத்தை அரசே செலுத்தி விடுவதால், மீதமுள்ள தொகையை செலுத்தி காப்பீடு செய்யலாம். சம்பா நெற் பயிரை பொறுத்த மட்டில், ஒரு ஏக்கர் பயிர் காப்பீடு செய்ய, கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள், 134 ரூபாயும், இதர விவசாயிகள், 149 ரூபாய் செலுத்தினால் போதும். பயிர் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை, தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்று, பூர்த்தி செய்து, பயிர் நடவு செய்த ஒரு மாதம் அல்லது, டிசம்பர், 15ம் தேதிக்குள், உரிய தொகையை செலுத்தி, தேசிய பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment