கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் வட்டம், கதகூர் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மகளிர், விவசாயிகள் மாநாட்டில் அவர் பேசியது:
எனது (சித்தராமையா) தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வறட்சி, பயிர்நாசம், கடன் தொல்லை போன்ற காரணங்களால் கர்நாடகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது.
விவசாயிகள் மீது அக்கறை கொண்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விவசாயிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
அதனடிப்படையில், கர்நாடகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருக்கும் பயிர்க் கடன்கள் மீதான வட்டி, மேல்வட்டி, வாராக் கடன் மீதான வட்டி ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.2
லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பண்ணை, சதுப்பு நிலங்களில் பணியாற்றி தற்கொலை செய்துகொண்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குழந்தைகளுக்கு முதுநிலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் மனைவிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாத உதவித்தொகை ரூ.500-இல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன் தொகையில் 50 சதத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்தால், மீதமுள்ள 50 சத கடன் தொகையை தள்ளுபடி செய்ய மாநில அரசும் தயாராக உள்ளது.
வறட்சியால் மாநிலத்தில் ரூ.16
ஆயிரம் கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்துள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நிவாரண உதவி செய்யும்படி கேட்டுக் கொண்ட போதும், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மாநில அரசு அனுப்பிய கோரிக்கைக்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை என்றார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் திக்விஜய் சிங், மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment